பா.வளர்மதி, அ.தி.மு.க. தொண்டர்களுக்கு மட்டுமல்லாது தமிழக அரசியலுக்கே பரிச்சயமான ஒரு நபர். சினிமாவில் இடம்பெற்ற அதிரடி பெண் பேச்சாளர்களின் கதாபாத்திரங்களான சைதை தமிழரசியும் சவுண்டு சரோஜாவுமே தோற்றுப்போகும் அளவுக்கான பேச்சுக்கு சொந்தக்காரர்.
பா.வளர்மதி – மேடைப்பேச்சு அரசியல்
மதுரைக்காரரான வளர்மதி, தனது மேடைப் பேச்சால் அரசியலில் முக்கிய இடம் பிடித்தவர். 14 வயதிலேயே எம்.ஜி.ஆர் இருந்த மேடையில் கருணாநிதியை பொளந்து கட்டி அடையாளம் அடைந்தவர். அதன்பின் 70களின் இறுதியில் தென் மாவட்டங்களில் அ.தி.மு.க-வின் பிரசார பீரங்கி ஆனார். `அக்கா வாயைத் திறந்தாலே ஆர்.டி.எக்ஸ் குண்டுகள்தான்… வளர்மதியை வளர்த்ததில் முக்கிய பங்கு கு.க.செல்வத்துக்கு உண்டு. செல்வம் அதன் பின்னர் தி.மு.க-வில் சேர்ந்து தலைமை நிலைய செயலாளர் வரை வளர்ந்து கடந்த ஆண்டு பா.ஜ.க-வில் சேர்ந்து இப்போது ஆக்டிவ் அரசியலில் இருந்து ஒதுங்கி நிற்கிறார்.

ரைட்டில் இண்டிகேட்டர் போட்டு லெஃப்டில் கையை காட்டி ஸ்ட்ரெய்ட்டாக செல்லும் சென்னை ஆட்டோக்காரர்களின் ரூட்டுக்கு சற்றும் சளைத்ததில்லை வளர்மதியின் அரசியல் ரூட். வளர்மதியின் அரசியல் குரு ஆர்.எம்.வீரப்பன். எம்.ஜி.ஆர் உடல்நலம் இல்லாமல் வெளிநாட்டில் சிகிச்சையில் இருந்தபோது இடைதேர்தலில் நிற்க வைக்கப்பட்டு எம்.எல்.ஏ. ஆனார். அப்போது வளர்மதிக்கு வயது 25. எம்.ஜி.ஆர் மறைவுக்கு பிறகு ஜானகி அணிக்கு வீரப்பன் செல்ல அவருடனேயே சென்று ஜெயலலிதாவை தமிழகம் எங்கும் கிழி கிழி என கிழித்தார். பின்னர் 1991-ல் ஜெயலலிதா ஆட்சியை பிடித்ததும் அவரிடம் வந்து சேர்ந்தார். பேச்சாளராக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த வளர்மதி 2001 தேர்தலில் அரசியல் குருவான ஆர்.எம்.வீரப்பனுக்கு எதிராகவே நிறுத்தப்பட்டார். அந்தத் தேர்தலில் வெற்றிபெற்று அமைச்சரானார்.
மேடைப்பேச்சில் இருந்துவந்த அநாகரீக வார்த்தைகள் சட்டசபையிலும் எதிரொலித்தன. ஜெயலலிதாவின் குட் புக்கில் வளர்மதி தொடர்ந்து இருக்கக் காரணம் அவரது இந்த பேச்சும் ஆன்மீகமும். 2006-ல் தோல்வி, 2011-ல் வெற்றி. மீண்டும் அமைச்சர், 2016-ல் மீண்டும் தோல்வி என பரமபத விளையாட்டாகவே அவரது அரசியல் இருந்து வந்தது. ஜெயலலிதா இறந்தபிறகு கட்சியின் சீனியர்களில் ஒருவரானார். ஜெயலலிதா முன்னிலையிலேயே சசிகலாவுக்கு பதவி வேண்டும் என்று முதலில் குரல் கொடுத்த வளர்மதி, ஒரு கட்டத்தில் அதே சசிகலாவையே திட்டுவார் என்பதெல்லாம் காலமே எதிர்பாராத ஒன்று. அரசியலில்தான் எதுவும் சாத்தியமாயிற்றே…

`டைம் மெஷின் கிடைத்தால் எதை மாற்றுவீர்கள்?’ என்று வளர்மதியிடம் கடந்த வாரத்தில் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அப்போது வளர்மதியின் நினைவுக்குத் தன்னை அரசியலுக்கு கொண்டு வந்த எம்.ஜி.ஆரோ, அமைச்சராக்கி அழகுபார்த்த ஜெயலலிதாவோ வரவில்லை. பதிலாக,அ.தி.மு.க ஆட்சியைக் கொண்டு வருவேன்’ என்றுதான் பதில் சொன்னார். இந்த வளர்மதிக்குதான் அ.தி.மு.க-வில் ஒரு புது சிக்கல் தொடங்கி உள்ளதாக அந்த கட்சியின் நிர்வாகிகள் கூறுகிறார்கள்.

அ.தி.மு.க-வின் பொன்விழாவை எப்படிக் கொண்டாடலாம் என்று ஆலோசிக்க கடந்த வாரம் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் அமைப்புச் செயலாளர் ஜே.சி.டி.பிரபாகரன் பேசும்போது, பொன்விழாவையொட்டி கட்சித் தலைமை அலுவலகத்துக்குஎம்.ஜி.ஆர் மாளிகை’ என்று பெயர் சூட்ட வேண்டும்’ என்று கூற அதற்கு வளர்மதி கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். அதெல்லாம் முடியாது. இந்தச் சொத்து ஜானகி பெயரில்தான் இருந்தது. அவர் கொடுத்த இடத்தில் கட்டிய கட்டடம் இது’ என்றார்.ஜானகி விசுவாசம் இன்னும் போகலையா?’ என்று வைத்திலிங்கம் கடுப்படித்துள்ளார். பிரபாகர் பேசும்வரை குறுக்கிட்டு எதையும் பேச வேண்டாம்’ என்று வளர்மதியிடம் வைத்திலிங்கம் கூற, டென்ஷனான வளர்மதி,அதையெல்லாம் நீங்க சொல்லக் கூடாது. நீங்க மட்டும்தான் கட்சியா?’ என்று எகிறியிருக்கிறார். இதையடுத்து, கோபத்தில் விருட்டெனக் கிளம்பிவிட்டார் வளர்மதி. பிறகு எடப்பாடிதான், `அந்தம்மாவைக் கூட்டிட்டு வாங்க’ என்று சொல்ல… வளர்மதியை மீண்டும் உள்ளே அழைத்து வந்திருக்கிறார்கள்.

இந்நிலையில் வளர்மதிக்கு தி.மு.க-விலும் உயர் பதவிகளில் இருப்பவர்களுடன் நல்ல தொடர்பு இருக்கிறது. எனவே, வளர்மதி மூலமாக தான் நம் கட்சியின் தகவல்கள் தி.மு.க-வுக்குச் செல்கிறது என்று சிலர் எடப்பாடி மற்றும் ஓபிஎஸ்சிடம் சொல்லி இருக்கிறார்கள். இதனால் வளர்மதியை கட்சியில் இருந்து ஓரம் கட்டும் பணிகள் தொடங்கி உள்ளன. வளர்மதிக்கு நெருக்கமான தி.மு.க நிர்வாகிகளில் முக்கியமானவர் யார் தெரியுமா? முண்டாசுக் கவிஞரின் பெயர் கொண்டவர்தான் மிகவும் நெருக்கமாம். அதெல்லாம் சரி, `கட்சியில பாதிபேர் சசிகலாவோட ஸ்லீப்பர் செல்ஸ்தானே?’ என்று சந்தேகம் வந்தால் கம்பெனி பொறுப்பல்ல…





Khám phá thế giới giải trí trực tuyến đỉnh cao tại MM88, nơi mang đến những trải nghiệm cá cược thể thao và casino sống động.