Chef Damu

தொடக்கமே அதிரிபுதிரிதான்… செஃப் தாமு-வின் பயணம்

குக்கு வித் கோமாளி ஜட்ஜாத்தான் இன்னிக்கு இருக்க பெரும்பாலானவங்களுக்கு செஃப் தாமு-வைத் தெரியும்… ஆனால், சர்வதேச அளவில் சவுத் இண்டியன் செஃப்களின் அடையாளம் அவர். அவரோட பயணம் எங்க தொடங்குச்சு… சமையல் கலை மீதான ஆர்வத்தில் அவர் செய்துவரும் முக்கியமான விஷயம்… பாரம்பரிய சமையல் மீதான காதல்னு செஃப் தாமுவைப் பத்தியும் அவரோட சமையல் காதல் பத்தியும்தான் இந்த வீடியோவுல பார்க்கப்போறோம்.

செஃப் தாமு
செஃப் தாமு

இன்னிக்கு இருக்க சூழ்நிலை வேற… ஆனால், தாமு படிக்குறப்போ கேட்டரிங் படிப்பு மீதான பார்வையே வேறு மாதிரி இருந்துச்சு… நான் கேட்டரிங் படிக்கப்போறேன்னு சொன்னப்ப, சமையலுக்கா படிக்கப்போறேன்’னு வீட்ல கடுமையான எதிர்ப்பு. அதையும் மீறித்தான் படிக்கவே செஞ்சிருக்கார். படிச்சு முடிச்ச உடனே மும்பை தாஜ் ஹோட்டலில் டிரெய்னியாக வேலை. Deep Frozen Room என்றழைக்கப்படும் கோல்டு ஸ்டோரேஜ் ரூமில் வேலை. கையைக் கிழித்து, கால்களில் காயம் என ஆரம்ப காலத்தில் ரொம்பவே கஷ்டப்பட்டிருக்கிறார். அங்கிருந்து படிப்படியாக முன்னேறி ஒரு செஃப் அந்தஸ்தை அடைந்திருக்கிறார். கேட்டரிங் துறை மீதான பார்வையை தமிழகத்தில் மாற்றியதில் செஃப் தாமுவோட பங்கு முக்கியமானது. இதுபத்தி அவர் பேசுகையில்,1994-ல இருந்து டிவில நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிட்டு இருக்கேன். ஆரம்பத்துல ஷோ முடிச்சு போகும்போது செஃப்னு சொல்ல மாட்டாங்க. சமையல்காரர்னுதான் சொல்வாங்க. கேட்டரிங் துறை பற்றி இன்னுமே நிறைய பேருக்குத் தெரிவதில்லை. அது என்னவோ தீண்டத்தகாத துறை மாதிரிதான் இருக்கு. பெற்றோர்கள், என் பையன் இன்ஜினீயரிங் படிக்குறான். டாக்டருக்குப் படிக்குறான்னு பெருமையாச் சொல்வாங்க. ஆனால், கேட்டரிங் படிப்பதைச் சொல்ல பெற்றோர்களுக்குத் தயக்கம் இருக்கிறது. இந்த நிலைமை விரைவில் மாறும் என்று நம்புகிறேன்’ என்று வேதனையோடு பகிர்ந்திருந்தார்.

தமிழ்நாட்டோட ஒவ்வொரு ஏரியாவுலயும் இருக்க பாரம்பரிய உணவுகள் இவருக்கு அத்துப்படி. அதை அந்தந்த ஏரியாவுக்கே சென்று சுவைத்ததோடு, அந்த ரெசிப்பிகளையும் பாதுகாக்க வேண்டும் என்று மெனக்கெடுபவர். திருச்சி இனாம் குளத்தூர் பிரியாணி, மதுரை அயிரை மீன் குழம்பு, கானாடுகாத்தான் மீன் குழம்பு, சுரக்காய் – சின்ன இரால் குழம்பு என இவர் சொல்லும் ரெஃபரென்ஸுகளின் பட்டியலே கொஞ்சம் நீளம். பிரியாணியிலேயே 20 வகைகள் சமைக்கத் தெரிந்த சகலகலா வித்தகர். சமையல்ல நாம சேக்குற ஒரு சின்ன Ingredientsகூட அதோட சுவையை மாத்திவிடும் வல்லமை பெற்றது என்று அடிக்கடி சொல்வார். உதாரணத்துக்கு இவர் சொல்வது… நீங்க சமையல்ல பயன்படுத்துற பச்சை மிளகாயைத் துண்டு துண்டாகக் கட் செய்து பயன்படுத்தினால் ஒரு சுவையையும், அதுவே நீள்வாக்கில் இரண்டாகப் பிளந்து சமையலுக்குப் பயன்படுத்தினால் அது ஒரு சுவையையும் கொடுக்கும் என்று உதாரணம் சொல்வார்.

இவரது முழுப்பெயர் கோதண்டராமன் தாமோதரன். செஃப் என்கிற வகையில் உணவுத் திருவிழாக்களில் வித்தியாசம் காட்டுவதில் நம்ம செஃப் கில்லாடி. ஒருபுறம் இந்தப் பணிகள் என்றாலும் மறுபுறம் கேட்டரிங் என்கிற சமையற்கலை, ஒரு கல்வியாக மக்களிடையே சென்று சேர வேண்டும் என்கிற தனியாத ஆவல் இவரது ஸ்பெஷல் குவாலிட்டி. இதனாலேயே செஃப் ஆன பிறகு ஒரு கேட்டரிங் கல்லூரியில் வைஸ் பிரின்சிபால் ஆனார். அதேவேளையில் இன்னொரு கல்லூரி இவரை பிரின்சிபாலாக்கியும் அழகு பார்த்தது. அந்த வகையில் கேட்டரிங் படிப்பை இன்றைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்ப்பதில் ஒரு இன்ஸ்பிரேஷனாகவும் இருக்கிறார் தாமு.

செஃப் தாமு
செஃப் தாமு

செஃப் தாமுவோட யூனிஃபார்ம்ல பார்த்தீங்க கின்னஸ் உலகச் சாதனையோட எம்பளம் போட்டிருக்கும்… ஏன் அது இருக்குனா… இதுவரைக்கும் சமையல்ல செஃப் தாமு படைச்சிருக்க கின்னஸ் உலகச் சாதனைகள் தெரியுமா.. அது என்னென்னு தெரிஞ்சுக்க வீடியோவைத் தொடர்ந்து பாருங்க!

தமிழ்நாடு மட்டுமல்லாது காலத்தால் அழிந்துபோன அல்லது மறக்கப்பட்ட பாரம்பரிய தென்னிந்திய உணவு வகைகளை மீட்டெடுப்பது தொடர்பாகத் தொடர்ச்சியான ஆய்வுகளில் இவர் ஈடுபட்டிருக்கிறார். சமையற்கலை தொடர்பாக இதுவரை 26-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியிருக்கிறார். அதில், இடம்பெற்றிருக்கும் ரெசிப்பிகளின் எண்ணிக்கை மட்டுமே சுமார் 5,400-க்கும் மேல இருக்கும். சுவையோ சுவை, அடுப்பாங்கரை, சமையல் தர்பார், நம்ம ஊரு சமையல் உள்ளிட்ட எத்தனையோ டிவி நிகழ்ச்சிகளில் இவர் தோன்றியிருந்தாலும் குக்கு வித் கோமாளி ஷோ இவருக்கு வேறு விதமான பப்ளிசிட்டியைக் கொடுத்தது. அந்த செட்டே தன்னை அப்பா என்று கூப்பிடும்போது அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். அடுத்த ஜென்மத்தில் இவர்கள் அத்தனை பேரும் எனக்குப் பிள்ளைகளாகப் பிறக்க வேண்டும் என்று ரொம்பவே நெகிழ்ச்சியாகப் பேசியிருந்தார் தாமு. டிவி நிகழ்ச்சிகள் தவிர கள்ளப்படம், உள்குத்து, ஒரு பக்கக் கதை உள்ளிட்ட படங்களிலும் கல்யாணம் கண்டிஷன்ஸ் அப்ளை என்கிற வெப் சீரிஸிலும் நடித்திருக்கிறார்.

Also Read – ‘Deadliest Villain’ பொன்னம்பலம் அவர்களுடைய 4 யுனீக் குவாலிட்டிகள்!

சமையல் கலையின் மேல் தீராத காதல் கொண்டிருக்கும் நம்ம செஃப் தாமு இன்னொரு தரமான சம்பவமும் பண்ணிருக்கார். 2004-ல ஹோட்டல் மேனேஜ்மெண்ட் மற்றும் கேட்டரிங் துறையில் இவர் மெட்ராஸ் யுனிவர்சிட்டியில டாக்டர் பட்டம் பெற்றார். இதன்மூலம், இந்தத் துறையில் முனைவர் பட்டம் பெற்ற முதல் இந்திய செஃப் என்கிற பெருமை பெற்றார். அதேபோல், சமையலில் சிறுதானியங்கள் பயன்பாட்டை ஊக்குவிப்பதில் முக்கியமான பங்காற்றி வருகிறார். குறிப்பாக, பாரம்பரியமான சிறுதானியங்களைக் கொண்டு நம் முன்னோர்கள் சமைத்த களி வகைகளை மீட்டெடுக்க வேண்டும் என்று பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார். நம் முன்னோர்கள் இந்த மாதிரியான சிறு தானியங்களை வைத்து ஆரோக்கியமான, அதேநேரம் சுவையான எத்தனையோ டிஷ்களை செய்திருக்கிறார்கள். துரதிருஷ்ட வசமாக அதையெல்லாம் நாம் மறந்துவிட்டோம்’ என்று சொல்வார். அவர்கிட்ட நீங்க சாப்பிட்ட பெஸ்ட் பிரியாணி எதுனு ஒருமுறை கேள்வி கேட்டாங்க... அதுக்கு அவர் சொன்ன பதில்,வேதாரண்யம் பக்கத்துல இருக்க ஒரு சின்ன கடைல சாப்பிட்ட பிரியாணினுதான் சொல்வேன்’னு டக்குனு பதில் சொல்லியிருப்பாரு. அந்த அளவுக்கு தான் ருசித்த உணவுகள் பற்றி அபார நினைவாற்றல் கொண்டவர். அதேபோல், தமிழகத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று அங்குள்ள பாட்டிகளிடம் அவர்களின் ஸ்பெஷல் டிஷ்களை சமைக்கச் சொல்லி, அதுபற்றி கேட்டறிந்துகொண்டு வருவது இவரின் ஹாஃபிகளில் ஒன்று.

செஃப் தாமு
செஃப் தாமு

இவர் தொடர்ச்சியா 24 மணி நேரம் 30 நிமிடம் 12 விநாடிகள் சமைச்சு சாதனை படைச்சிருக்காரு. கிட்டத்தட்ட 617 டிஷ்களை இவர் சமைச்சதுதான் உலகின் நீண்ட நேரம் நடத்தப்பட்ட சமையல். அதேபோல், சிங்கப்பூரில் ஒரே சமையல் பாத்திரத்தில் 15,400 கிலோ காய்கறிகளை வைத்து இவர் ஒரு டிஷ் செய்தார். அந்த டிஷ் மட்டும் சுமார் 2,40,000 பேருக்கு பரிமாறப்பட்டது. அதேபோல், மதுரையில் கடந்த 2014-ல் 48.2 அடி நீளத்தில் இவர் மற்ற செஃப்களோடு இணைந்து சுட்ட தோசைதான் உலகின் நீளமான தோசை… அதேபோல், கடந்த 2021-ல் லண்டனில் நடைபெற்ற உலகளாவிய உணவு, விருந்தோம்பல் மற்றும் சுற்றுலா சாதனைகள் நிகழ்ச்சியில் செஃப் தாமுவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை உலகத் தமிழ் அமைப்பு வழங்கி கௌரவித்தது. இந்த விருதைப் பெற்ற முதல் நபர் தாமுதான் என்பது கூடுதல் சிறப்பு.

செஃப் தாமுவோட சமையல்ல உங்களோட ஃபேவரைட் டிஷ்னா எதைச் சொல்வீங்க… அதுக்கான காரணத்தையும் மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top