விராட் கோலி

Cricket Controversies: கோலி, டிம்பெய்ன், ஐபிஎல் – 2021-ல் கிரிக்கெட் உலகை அதிரவைத்த 5 சர்ச்சைகள்!

கொரோனா சூழலால் 2021-ம் ஆண்டின் பெரும்பகுதி போட்டிகள் எதுவுமின்றியே கடந்துபோனான் கிரிக்கெட் ரசிகன். அதேநேரம், இந்த ஆண்டில் கிரிக்கெட் உலகில் சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லை. அப்படியான 5 பெரிய சர்ச்சைகளைத்தான் பார்க்கப் போகிறோம்.

கிரிக்கெட் – 2021

நியூசிலாந்து
நியூசிலாந்து

முதல்முறையாக நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வெற்றிபெற்று நியூசிலாந்து அணி சாம்பியன் பட்டம் வென்றது. டி20 உலகக் கோப்பையில் 14 ஆண்டு ஏக்கத்தைத் தீர்த்து முதல்முறையாக ஆஸ்திரேலியா வாகை சூடியது. டி20 கிரிக்கெட்டில் ஒரு ஆண்டில் முதல்முறையாக 1,000 ரன்களைக் கடந்த வீரரானார் பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான். டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய அவதாரம் எடுத்த ரோஹித் ஷர்மா, இங்கிலாந்தில் பேட்டிங் செய்தது உலக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இப்படியான சாதனைகளுக்கு மத்தியில் கிரிக்கெட் உலகை சில சர்ச்சைகளும் சூழ்ந்தன.

2021-ல் கிரிக்கெட் உலகின் 5 சர்ச்சைகள்

கோலியின் கேப்டன்சி பறிப்பு

டி20 உலகக் கோப்பை தொடரோடு இந்திய டி20 அணியின் கேப்டன்சியில் இருந்து விலகப் போவதாக கேப்டன் விராட் கோலி அறிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல், ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகுவதாக அறிவித்திருந்தார். அதேநேரம், இந்திய ஒருநாள், டெஸ்ட் அணிகளின் கேப்டன் பொறுப்பில் தொடர விரும்புவதாகவும் கூறியிருந்தார். இந்தநிலையில், தென்னாப்பிரிக்கத் தொடருக்கான ஒருநாள் அணியை பிசிசிஐ அறிவித்தபோது, விராட் கோலியிடமிருந்து ரோஹித் ஷர்மாவுக்கு அந்தப் பொறுப்பு கொடுக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து பேசிய பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி, கேப்டன் பொறுப்பில் இருந்து விலக வேண்டாம் என விராட் கோலியிடம் தானே கேட்டுக் கொண்டதாகக் கூறியிருந்தார்.

விராட் கோலி
விராட் கோலி

ஆனால், அடுத்த சில நாட்களில் செய்தியாளர்களைச் சந்தித்த விராட் கோலி, கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவது குறித்து அணித் தேர்வுக்கு சில மணி நேரங்கள் முன்பாகவே தமக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதாகக் கூறி அதிரவைத்தார். மேலும், டி20 கேப்டன்சியில் இருந்து விலகுவதாகத் தாம் கூறியபோது, அதை வேண்டாம் என்று யாருமே தம்மிடம் கூறவில்லை என்றும், உடனே பிசிசிஐ தரப்பில் அதை ஏற்றுக்கொண்டதாகவும் கூறியது சர்ச்சையானது.

Also Read:

`வொயிட் பால் கிரிக்கெட்டில் முடிவுக்கு வந்த சகாப்தம்’ – ஒருநாள் போட்டிகளில் கேப்டன் கோலியின் ரெக்கார்ட்ஸ் எப்படி?

இங்கிலாந்து கிரிக்கெட்டின் இனவாத சர்ச்சை

2021-ம் ஆண்டு இங்கிலாந்து கிரிக்கெட் ரசிகர்கள் மறக்க முடியாத ஆண்டாக அமைந்துவிட்டது. அந்நாட்டின் முன்னணி கவுண்டி கிரிக்கெட் அணியான யார்க்‌ஷைர் கிளப் மிகப்பெரிய இனவாத சர்ச்சையில் சிக்கியது. அந்த கிளப்பின் முன்னாள் கேப்டன் அசீம் ரஃபீக், யார்க்‌ஷைர் கிளப் மீதும், அதன் வீரர்கள் மீது இனரீதியாகப் பாகுபாடு காட்டியதாக வைத்த குற்றச்சாட்டு இங்கிலாந்து கிரிக்கெட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து அந்நாட்டு நாடாளுமன்றக் குழு நடத்திய விசாரணையில், குற்றசாட்டில் உண்மை இருப்பது தெரியவந்தது.

அசீம் ரஃபீக்
அசீம் ரஃபீக்

அசீம் ரஃபீக்கை இனரீதியான வார்த்தைகளால் புண்படுத்தியதாக இங்கிலாந்து மற்றும் யார்க்‌ஷைர் அணிகளுக்காக விளையாடிய முன்னாள் வீரர் கேரி பேலன்ஸ் வெளிப்படையாக ஒப்புக்கொண்டு, மன்னிப்புக் கோரினார். இந்த சர்ச்சையால் உலக அளவில் விமர்சனங்களை எதிர்க்கொண்டது. யார்க்‌ஷைர் சேர்மன் ரோஜர் ஹட்டன், தனது பதவியை ராஜினாமா செய்தார். இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாஹன் மீதும் இனரீதியான பாகுபாடு காட்டியதாகக் குற்றச்சாட்டு எழவே, அவரைத் தனது வர்ணனையாளர்கள் குழுவில் இருந்து பிபிசி கழற்றிவிட்டது.

டிம் பெய்ன் சர்ச்சை

டிம் பெய்ன்
டிம் பெய்ன்

ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்த டிம் பெய்ன், 2021-ம் ஆண்டின் இறுதியில் தனது கேப்டன்சி பொறுப்பில் இருந்து விலகினார். டாஸ்மானியா கிரிக்கெட் அணியில் பணிபுரியும் பெண் ஒருவருக்கு அவர் அனுப்பியிருந்த ஆபாச மெசேஜ்கள், புகைப்படங்கள் குறித்த தகவல் வெளியாகி சர்ச்சையானது. பிரஸ்மீட்டில் இதற்காக கண்ணீருடன் மன்னிப்புக் கேட்ட பெய்ன், கிரிக்கெட்டில் இருந்து சிறிது காலம் விலகி இருப்பதாக அறிவித்தார். புகழ்பெற்ற ஆஷஸ் தொடருக்கு முன்னதாக வெளியான இந்தத் தகவல் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை உலுக்கிய சம்பவம்

மிஸ்பா உல் ஹக் - வக்கார் யூனஸ்
மிஸ்பா உல் ஹக் – வக்கார் யூனஸ்

டி20 உலகக் கோப்பை தொடருக்கு ஒரு மாதமே இருந்த நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மிஸ்பா – உல் – ஹக் மற்றும் பந்துவீச்சுப் பயிற்சியாளர் வக்கார் யூனஸ் ஆகியோர், தங்களது பதவிகளில் இருந்து விலகினர். பாகிஸ்தான் கிரிக்கெட்டில் இது பெரும் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், 2021 செப்டம்பர் 13-ல் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக முன்னாள் வீரர் ரமீஸ் ராஜா பொறுப்பேற்றார். அதன்பிறகு, பயிற்சியாளராக முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் சக்லைன் முஷ்டாக் நியமிக்கப்பட்டார். அவரது பயிற்சியின் கீழ் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியாவை வீழ்த்தியது பாகிஸ்தான். ஐசிசி உலகக் கோப்பை தொடர் ஒன்றில் இந்திய அணிக்கெதிரான போட்டியில் பாகிஸ்தான் வெற்றிபெற்றது இதுவே முதல்முறையாகும்.

ஐபிஎல்-லைக் கலக்கிய கொரோனா!

ஐபிஎல் 2021
ஐபிஎல் 2021

2021-ல் சர்வதேச கிரிக்கெட் தொடர்கள் குறைந்திருந்த நிலையில் ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐ முடிவு செய்து, மே மாதத்தில் போட்டிகளைத் தொடங்கியது. பயோ பபுள் சூழலில் கடுமையான கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளோடு 29 போட்டிகள் நடத்தப்பட்டிருந்த நிலையில், சி.எஸ்.கே, கொல்கத்தா, ஹைதராபாத் வீரர்கள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், மீதமிருக்கும் போட்டிகளை பிசிசிஐ ஒத்திவைத்தது. உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் லீக் தொடரான ஐபிஎல் தொடரை நடத்த முடியாத நிலையில், பல ஆயிரம் கோடி வருவாயை பிசிசிஐ இழக்கும் நிலை ஏற்பட்டது. ஆனால், அக்டோபரில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் மீதமிருக்கும் போட்டிகளை வெற்றிகரமாக நடத்தி முடித்தது பிசிசிஐ.

இவை தவிர கிரிக்கெட் உலகின் சர்ச்சைகள் என நீங்கள் நினைக்கும் நிகழ்வுகள் ஏதேனும் இருந்தால் கமெண்டில் சொல்லுங்க மக்களே..!

Also Read – The Ashes: நூற்றாண்டுகளைக் கடந்து தொடரும் பகை – ஆஷஸ் தொடர் பிறந்த கதை தெரியுமா? #AusVsEng

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top