வெளிநாட்டு இறக்குமதி காருக்கு நுழைவு வரி விதிக்கப்பட்டதை எதிர்த்து தனுஷ் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் அவர் தரப்பிடம் சரமாரியாகப் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது.
கடந்த 2015-ல் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்த ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு காருக்கு நுழைவு வரி விதிக்கப்பட்டதை எதிர்த்து நடிகர் தனுஷ் தாக்கல் செய்த வழக்கில் உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. நடிகர் விஜய் வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.சுப்பிரமணியன் இந்த வழக்கில் பல்வேறு கேள்விகளை தனுஷ் தரப்பு வழக்கறிஞரிடம் எழுப்பினார்.
தனுஷ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன் ஆஜராகி, ஏற்கனவே 50% வரி செலுத்திருப்பதாகவும் மீதமுள்ள வரி பாக்கியை ஆகஸ்ட் 9-ம் தேதிக்குள் செலுத்தத் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார். இதனால், வழக்கை முடித்து வைக்குமாறு வாதிட்டார். இதைக்கேட்ட நீதிபதி எம்.எஸ்.சுப்பிரமணியன், நுழைவு வரி விதிக்கப்பட்டதை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், மனுதாரர் தன்னுடைய பணியைக் குறிப்பிடாதது ஏன்… என்ன வேலை பார்க்கிறார் என்பதை ஏன் மறைத்தார் என்பது குறித்து விளக்க மனு தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார். நுழைவு வரி விவகாரத்தில் 2018ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னர், இத்தனை நாட்கள் வரி செலுத்தாமல் இருந்தது ஏன் என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, அப்போதே வரி பாக்கியை செலுத்தி வழக்கை முடித்துக் கொண்டிருக்கலாமே என்றும் வினவினார்.
இதனால், மனுதாரரின் நோக்கம் என்ன என்று கேட்ட நீதிபதி, வழக்கை வாபஸ் பெற அனுமதிக்க முடியாது என்று தெரிவித்தார். உங்கள் தொழிலில் நீங்கள் எத்தனை கோடி வேண்டு மானாலும் சம்பாதியுங்கள், எவ்வளவு தொகைக்கு வேண்டுமானாலும் கார் வாங்குங்கள் எனக் குறிப்பிட்ட நீதிபதி, ஆனால், அரசுக்குச் செலுத்த வேண்டிய தொகையை முழுமையாகச் செலுத்துங்கள் என அறிவுறுத்தினார். எந்த தனிப்பட்ட ஒருவரையும் குற்றம் சாட்ட வேண்டுமென்பது தன் நோக்கம் அல்ல என்றும், அரசு விதிகள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகள்படி நடக்கும்படியும் அறிவுறுத்தினார். வரி பாக்கியை 48 மணி நேரத்துக்குள் செலுத்தவும் தனுஷ் தரப்புக்கு நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார்.
2015-ம் ஆண்டு இறக்குமதி செய்த காருக்கு ஐம்பது சதவிகித வரி செலுத்துவதாகக் கூறியதை அடுத்து உரிய விதிகளைப் பின்பற்றி ஆர்.டி.ஓ அலுவலகத்தில் தனுஷின் காரைப் பதிவு செய்துகொள்ளலாம் என உயர் நீதிமன்ற நீதிபதி துரைசாமி 2016-ம் ஆண்டு ஏப்ரலில் உத்தரவிட்டிருந்தார். வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு ஏற்கெனவே இறக்குமதி வரி கட்டியிருப்பதால், நுழைவு வரி விதிக்க முடியாது என கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து, கேரள உயர் நீதிமன்றத் தீர்ப்பை சுட்டிக்காட்டி நுழைவு வரி விதிப்புக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் நிறைய வழக்குகள் போடப்பட்டன. அவை நிலுவையில் இருக்கின்றன. கேரள உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் நுழைவு வரி விதிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் இருப்பதாக கடந்த 2018-ல் தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.
Also Read – காருக்கு நுழைவு வரி… விஜய் வழக்குக்கும் தனுஷ் வழக்குக்கும் உள்ள ஒற்றுமை!