நீதிபதி கிருபாகரன்

நீதிபதி கிருபாகரன் `மக்கள் நீதிபதி’ என போற்றப்படுவது ஏன்?

`மக்கள் நீதிபதி’ என்று அழைக்கப்பட்ட சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் ஆகஸ்ட் 20-ல் பணி ஓய்வுபெறுகிறார். மொஹரம் பண்டிகையை ஒட்டி அரசு விடுமுறை என்பதால் அவருக்கு முன்னதாகவே பிரிவு உபசார விழா நடைபெற்றது. அவர் மக்கள் நல நீதிபதி என அழைக்கப்பட என்ன காரணம்?

நீதிபதி கிருபாகரன்

திருவண்ணாமலை மாவட்டம் நெடும்பிறை கிராமத்தில் விவசாயக் குடும்பம் ஒன்றில் 1959-ம் ஆண்டு பிறந்தவர் நீதிபதி கிருபாகரன். இவரது தந்தை நடேச கவுண்டர் 4-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். அந்த ஊரில் பள்ளி கொண்டு வர பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தவர். சட்டப்படிப்பை முடித்து 1985-ம் ஆண்டு செப்டம்பர் 4-ல் வழக்கறிஞராகப் பதிவு செய்தார். சிவில் வழக்குகளில் நிபுணத்துவம் பெற்றிருந்த இவர் மத்திய, மாநில அரசுகளின் வழக்கறிஞராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். 2009-ம் ஆண்டு மார்ச் 31-ல் சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட இவர், 2011 மார்ச் 29-ல் நிரந்தர நீதிபதியானார்.

மக்கள் நீதிபதி

சாமானிய மக்களின் நலன் கருதி பல்வேறு வழக்குகளில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கியவர் நீதிபதி கிருபாகரன். பிரிவு உபசார விழாவில் பேசிய தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம், “2009-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்ற நீதிபதி கிருபாகரன், ஏராளமான வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புகளை வழங்கியிருக்கிறார். இதனால்தான் இவரை மக்கள் நல நீதிபதி என்கிறார்கள்’’ என்று புகழாரம் சூட்டினார்.

நீதிபதி கிருபாகரன் 12 ஆண்டு கால பணிக்காலத்தில் சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பல்வேறு வழக்குகளை விசாரித்துத் தீர்ப்பளித்தவர். டிக்டாக் தடை, கட்டாய ஹெல்மெட் உள்ளிட்ட தீர்ப்புகளை அளித்து மக்கள் மனதில் இடம்பிடித்தவர். தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இடஒதுக்கீடு சட்ட முன்வடிவு ஆளுநரின் ஒப்புதலுக்காகக் காந்திருந்தது. அதேபோல், தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 20% இட ஒதுக்கீடு சட்டமும் ஆளுநர் ஒப்புதலுக்காக மாதக்கணக்கில் காத்திருந்தது. அப்போது, இவர் அடுத்தடுத்து அளித்த தீர்ப்புகளால் ஆளுநர் ஒப்புதல் அளித்தார்.

நீதிபதி கிருபாகரன்
நீதிபதி கிருபாகரன்

ஆன்லைன் ரம்மிக்குத் தடை விதிப்பு, ஆதிச்சநல்லூர், சிவகளை, பொற்பனைக் கோட்டை போன்ற இடங்களில் அகழாய்வுப் பணி மேற்கொள்ள உத்தரவு, கொடைக்கானலில் விதிமீறல் கட்டடங்களுக்கு சீல் வைக்க உத்தரவிட்டது. எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் 3 ஆண்டுகளுக்குள் கட்டி முடிக்கப்படும் என்று நம்புவதாகவும் தெரிவித்தார். கடைசி பணி நாளான ஆகஸ்ட் 19-ல் கர்நாடக மாநிலம் மைசூருவில் இருக்கும் தமிழ் கல்வெட்டுகளை 6 மாதத்தில் சென்னையில் உள்ள தமிழ் கல்வெட்டியல் துறைக்கு மாற்ற வேண்டும் என்று உத்தரவிட்டார்.

கண்கலங்கிய நீதிபதி

பிரிவு உபசார விழாவில் பேசிய நீதிபதி கிருபாகரன், உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சதாசிவம், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார். அவர் மேலும் பேசுகையில், “குடும்பத்துடன் நான் அதிக நேரம் செலவிட்டதே இல்லை. இதனால்தான், கனவில் கூட வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்குவேன் என்று எனது மனைவி சொல்வார்’’ என்று உருக்கமாகப் பேசினார். மக்கள் நலன் கருதி மதுக்கடைகளை முழுமையாக மூட அரசு முடிவெடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

Also Read – இ-பான் கார்டு வேண்டுமா… 10 நிமிடத்தில் பெறுவது எப்படி?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top