நட்சத்திரக் கோயில்கள் – பூரம் நட்சத்திரக்காரர்கள் அவசியம் வழிபட வேண்டிய கோயில்!

நட்சத்திரங்கள் என்பது நிலவு சார் அளவு ஆகும். ராசிச் சக்கரத்தை 27 சமபங்குகளாகப் பிரிக்கப்பட்ட பிரிவுகளைக் குறிக்கும். அஸ்வினி முதல் ரேவதி வரையிலான 27 நட்சத்திரங்களும் பஞ்சாங்கத்தின் ஓர் உறுப்பு என்கிறார்கள் ஜோதிட வல்லுநர்கள். ஒவ்வொரு நட்சத்திரங்களும் 4 பாதங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. மனிதன் பிறக்கும் பொழுதே அவனுடன் சேர்ந்து அவனுக்குரிய ராசியும் நட்சத்திரங்களும் தோன்றிவிடுகின்றன. வானில் திங்கள் நிற்கும் நாள் மீன் கூட்டம், அப்பொழுதுக்கான நட்சத்திரம் என எடுத்துக்கொள்ளப்படுவது ஐதீகம்.

எடுத்துக்காட்டாக ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சந்திரன், ராசிச் சக்கரத்தில் ரேவதி நட்சத்திரப்பிரிவில் இருந்தால் அந்த நேரத்துக்குரிய நட்சத்திரமாக ரேவதி எடுத்துக்கொள்ளப்படுகிறது. வாழ்வில் இருள் நீங்கி ஒளிபொருந்திய சூழல் உருவாக தங்களின் நட்சத்திரங்களுக்கு உரிய கோயில்களுக்குச் சென்று வழிப்பட்டு வந்தால் நன்மை உண்டாகும் என்பது நம்பிக்கை. அந்த வகையில் இன்று பூரம் நட்சத்திரத்திற்கு எந்த கோயிலில் வழிபட வேண்டும், என்னென்ன இடங்களைத் தவறாமல் தரிசிக்க வேண்டும் என்பதைப் பற்றித்தான் நாம் இக்கட்டுரையில் தெரிந்து கொள்ளப்போகிறோம்.

பூரம் நட்சத்திரம்

பூரம் நட்சத்திரத்தின் நட்சத்திர அதிபதியாய் சுக்கிரனும், ராசி அதிபதியாய் சூரியனும், நவாம்ச அதிபதியாய் முதல் பாதத்தில் சூரியனும், இரண்டாம் பாதத்தில் புதனும், மூன்றாம் பாதத்தில் சுக்கிரனும், நான்காம் பாதத்தில் செவ்வாயும் வலம் வருகின்றன. பொருள் வளத்துக்கும், சுகபோகங்களுக்கும் சொந்தகாரராக விளங்கும் சுக்கிரன் பிறந்த நட்சத்திரமாக பூரம் நட்சத்திரம் பார்க்கப்படுகிறது. எனவே இந்நட்சத்திரகாரர்கள் பொதுவாகவே செல்வ வளம் மிகுந்து காணப்படுவர். பூரம் நட்சத்திரகாரர்கள் ஸ்ரீகாமாட்சி அம்மனையும், மகாலட்சுமியையும் வணங்கி வழிபட்டு வர நன்மைகள் உணடாகும் என்பது நம்பிக்கை. இந்நட்சத்திரகாரர்களின் அதிதேவதையாக ஸ்ரீஆண்டாளும், பார்வதியும் பார்க்கப்படுகிறது. பரிகார தெய்வமாக துர்க்கை அம்மனை வணங்கி வர, வரும் துன்பங்கள் எல்லாம் நீங்கும் என்பது நம்பிக்கை. அதிர்ஷ்டத்தை வளர்த்துக்கொள்ள இந்நட்சத்திரக்காரர்கள் பொன் தானம் செய்யவேண்டும். இறைதலங்களுக்கு செல்லும் போது இறைவனுக்கு தாமரை மலர்களை சாத்தி வணங்க வேண்டும்.

ஸ்ரீஹரிதீர்த்தேஸ்வரர் ஆலயம்
ஸ்ரீஹரிதீர்த்தேஸ்வரர் ஆலயம்

பூரம் நட்சத்திரக்காரர்களுக்கு பொதுவாகவே, சந்திரன், சனி, ராகு, ஆகிய காலங்கள் யாவும் சாதகம் அற்றவைகளாக இருக்கின்றன. இத்தகைய சாதகம் அற்ற காலங்களை கடந்து வர சூரிய சாந்தி ஹோமம், சுக்கிர சாந்தி ஹோமம் மற்றும் லட்சுமி சாந்தி ஹோமம் ஆகியவற்றை செய்து வர நன்மைகள் பல உண்டாகும். இந்நட்சத்திரகாரர்கள் சூரிய மந்திரம், சுக்கிர மந்திரம், லட்சுமி மந்திரம் ஆகிய மந்திரங்களைக் கேட்டு துதித்து வர உற்சாகமாக இருக்கலாம். பூரம் நட்சத்திரகாரர்கள் வாரந்தோறும், வெள்ளிக்கிழமைகளில் அருகில் உள்ள நவகிரக கோயிலுக்குச் சென்று சுக்கிர பகவானை மல்லிகை பூக்கள் கொண்டு பூஜித்து, இனிப்பு நைவேத்தியம் வைத்து சுக்கிர பகவானுக்கு உரிய மந்திரங்களை துதித்து வழிபட வேண்டும். அதேபோல் வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் மகாலட்சுமி படத்துக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, தூபங்கள் கொளுத்தி பிரார்த்தித்து வந்தால் நன்மைகள் உண்டாகும். வருடத்தில் ஒரு முறையாவது கஞ்சனூர் சுக்கிர பகவான் கோயிலுக்குச் சென்று வழிபட்டு வர வாழ்வில் எதிர்பாராத நன்மைகள் உண்டாகும்.

திருவரங்குளம் ஸ்ரீஹரிதீர்த்தேஸ்வரர் ஆலயம்

ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர் திருத்தலம் புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் என்ற பகுதியில் அமைந்துள்ளது. இத்தலத்தினை பூரம் நட்சத்திரக்காரர்கள் வணங்கி வழிபட்டு வந்தால் தங்களுடைய தோஷங்கள் நீங்கி நன்மைகள் நடக்கும் என்பது நம்பிக்கை. சோழர்களால் கட்டப்பட்ட இந்தத் தலத்தின் நடை, காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறக்கப்படுகிறது.

Also Read – நட்சத்திர கோயில்கள் – மகம் நட்சத்திரத்துக்கு எந்த கோயில்ல வழிபடணும்?

சோழ மன்னனான கல்மாஷபாதனுக்கு நீண்ட காலங்கள் ஆகியும் குழந்தை வரம் கிடைக்காததால் அகத்திய முனிவரிடம் முறையிட்டு வரம் கேட்டான். முனிவரோ மன்னனிடம் உன்னுடைய குறைகள் நீங்க, திருவரங்குளம் சென்று அங்கிருக்கும் சிவலிங்கத்தை வணங்கி வழிபட்டு வர உனக்கு பிள்ளைப் பேறு கிடைக்கும் என்றார். முனிவரின் வாக்குப்படி மன்னன் திருவரங்குளம் சென்று சிவலிங்கத்தைத் தேடினான். சிவபெருமான், தான் இருக்கு இடத்தை மன்னனுக்கு உணர்த்த திருவுளம் கொண்டார். அப்போது அங்கு ஆடு மேய்க்கும் சிறுவனிடம் மன்னன் வினவியபோது, இங்கு பூஜை சாமான்களுடன் வருபவர்கள் குறிப்பிட்ட ஒரு இடத்தில் தடுக்கி விழுவார்கள் என அந்த இடத்தை அச்சிறுவன் காட்ட மன்னன் அவ்விடத்தை தோண்டினான். அப்போது அவ்விடத்தில் இருந்து ரத்தம் பீச்சிட்டு அடித்தது. தான், தோண்டியதால்தான் சிவபெருமான் தலையில் காயம் ஏற்பட்டு இருக்குமோ என நினைத்து மன்னன் தன் உயிரை மாய்த்துக்கொள்ள முடிவு செய்வான். அந்த சமயத்தில் சிவபெருமான் பார்வதி தேவியுடன் மன்னன் முன் காட்சி அளித்து, தரிசனம் தருவார். அதன்பின் மன்னனுக்கு ஆண் குழந்தை பிறக்கும் என்று புராண வரலாறு உள்ளது. இந்நிகழ்ச்சியானது, பூர நட்சத்திர நாளில் நடந்ததால் இந்த கோயிலானது பூரம் நட்சத்திரக்காரர்களுக்கு விஷேசமாக விளங்குகிறது.

ஸ்ரீஹரிதீர்த்தேஸ்வரர் ஆலயம்
ஸ்ரீஹரிதீர்த்தேஸ்வரர் ஆலயம்

இத்திருத்தலத்தினை சுற்றி சுமார் 150 கி.மீ தூரம் சுற்றளவில் உள்ள பெரும்பாலான மக்கள் இத்தல இறைவனை குலதெய்வமாகக் கொண்டு வழிபட்டு வருகின்றனர். இத்தல இறைவனான சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக கிழக்கு நோக்கி அமர்ந்து அருள்பாலிக்கிறார். பெரியநாயகி அம்மன் நான்கு திருக்கரத்துடன் தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் காட்சி அளித்து தரிசனம் தருகிறாள். கிரக தோஷம், நாகதோஷம், மன நோயால் பாதிக்கப்பட்டவர்கள், அம்மனிடம் உள்ள ஸ்ரீசக்கரத்தை நினைத்து வழிபட்டு வந்தால் பலன் கிடைக்கும்.

இத்தலத்துக்கு வருவோர், சிவனுக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் சாற்றி நேர்த்திக் கடன் செய்துவர பெரும் நன்மைகள் உண்டாகும். ஆடிப்பூரம், அம்மன் திருக்கல்யாணம், மகா சிவராத்திரி, திருவாதிரை, திருக்கார்த்திகை, வைகாசி விசாகம் ஆகிய நாட்களில் விஷேசமாக பிரசித்தி பெற்று விளங்குகிறது.

எப்படிப் போகலாம்?

ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர் ஆலயமானது, புதுகோட்டை மாவட்டத்தில் உள்ள திருவரங்குளம் பகுதியில் உள்ளது. புதுக்கோட்டையில் இருந்து பட்டுக்கோட்டை போகும் பாதையில் திருவரங்குளம் அமைந்துள்ளது. சென்னை, திருச்சி, தஞ்சாவூர், காரைக்குடி, பட்டுக்கோட்டை, மதுரை, கும்பகோணம், நாகப்பட்டினம், போன்ற தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன. இத்திருத்தலத்துக்கு அருகில் உள்ள ரயில் நிலையம் புதுக்கோட்டை ரயில் நிலையம். அருகில் உள்ள விமான நிலையம் திருச்சி விமான நிலையம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top