2022 புதிய ஆண்டு மேஷ ராசிக்காரர்களுக்கு முக்கியமான ஆண்டாக இருக்கும். வருடாந்திர ஜாதகத்தின்படி, இந்த ஆண்டின் தொடக்கத்தில் மேஷ ராசிக்காரர்கள், தங்களது எதிர்காலம் பற்றிய முக்கியமான முடிவுகளை எடுப்பர்.
மேஷ ராசிக்கான 2022 ஆண்டு ராசிபலன்
அஸ்வினி, பரணி மற்றும் கார்த்திகை நட்சத்திரங்களின் முதல் பாகம் வரை உள்ளவர்கள் மேஷ ராசிக்காரர்கள் ஆவர். இந்த ராசியின் அதிபதி செவ்வாய். இந்த கிரகத்தின் அதிதேவதை முருகன். மேஷ ராசியின் அஸ்வினி ஞானத்தையும் பரணி அரச யோகத்தையும் குறிப்பவை. இயல்பாகவே தைரியமும், நம்பிக்கையும் ஆற்றலும் வலிமையும் கொண்டவர்களாக மேஷ ராசிக்காரர்கள் திகழ்வார்கள்.
ஆண்டின் தொடக்கத்தில் சுப காரியங்கள் கைகூடும். இரண்டாம் பாதியில் கனவுகள் நனவாகத் தொடங்கும். தொடக்கத்தில் கடினமாக உழைத்து சேர்த்த பணம், பிற்பாதியில் உங்களுக்குக் கைகொடுக்கும். தொழில், வணிகம், கல்வி ரீதியில் உங்களுக்கு மகத்தான வெற்றி கைகூடும். வேலையிலேயே அதிக நேரத்தைச் செலவிட வேண்டிய சூழல் வரும் என்பதால், குடும்பத்தினர், நண்பர்களுடன் போதிய நேரத்தைச் செலவிட முடியாமல் போகலாம். வேலை, வியாபாரத்தில் புதிய ஆதரவு கிட்டும்.
கல்வி
2022-ம் ஆண்டு மேஷ ராசிக்காரர்களுக்குக் கல்வியில் வெற்றிகரமான ஆண்டாக இருக்கும். மாணவர்கள், தங்கள் எதிர்பார்த்த வெற்றியை ஈட்டுவர். ஆண்டின் தொடக்கத்தில் கலவையான முடிவுகள் கிட்டினாலும், பிற்பகுதியில் எதிர்பார்த்த காரியம் கைகூடும். வெற்றி உங்களைத் தேடி வரும். கல்வியைப் பொறுத்தவரை வாழ்வில் பலனளிக்கும் முடிவுகள் கிடைக்கும்.
பொருளாதாரம் – தொழில்
பொருளாதாரரீதியாக நிலையான தன்மை உங்களுக்கு இருக்கும். பெரிய செலவுகள், குறிப்பிடத்தக்க செலவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு நல்ல லாபம் கிட்டலாம். முதலீடுகளைப் பொறுத்தவரை சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். சரியான வகையில் முதலீடு செய்யும்பட்சத்தில் வரவுக்குக் குறைவிருக்காது. பொழுதுபோக்கு, பயணம், தேவையற்ற பொருட்கள், பரிசுகள் வாங்குவதில் செலவுகள் ஏற்படலாம். தொழிலைப் பொறுத்தவரையில் இந்த ஆண்டு கவனமாக இருப்பது நல்லது. தொழில் விஷயத்தில் பாட்னர்களிடம் கூடுதல் கவனமாக இருப்பது நல்லது. கடன் வாங்குவதைத் தவிர்த்தால் தேவையற்ற மனக் கஷ்டத்தில் இருந்து தப்பலாம். முக்கியமான தொழில் விஷயங்கள், எதிர்கால முதலீடு, திட்டமிடல் குறித்து நன்கு ஆராய்ந்து முடிவெடுங்கள். வெளிநாட்டுத் தொடர்புகள், தொழில் வாய்ப்புகள் பெருகும். வேலை நிமித்தமாக வெளிநாடு செல்லும் வாய்ப்புகளும், வெளிநாட்டு வளங்கள் மூலமாக லாபம் கிட்டவும் வாய்ப்புகள் உருவாகும்.
Also Read
குடும்பம்
இந்த ஆண்டு உங்கள் குடும்பத்தில் இணக்கமான சூழல் நிலவும். உங்கள் வாழ்க்கைத் துணையின் அன்பையும், ஆதரவையும் பெறுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். ஆன்மிகத்திலும் தொண்டு செய்வதிலும் ஆர்வம் காட்டுவீர்கள். இதனால், வாழ்வில் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் அதிகரிக்கும். உங்கள் ராசிப்படி குழந்தைகளுக்கு இந்த ஆண்டின் தொடக்கம் நல்லதாகவே அமையும். கல்வி விஷயத்தில் முன்னேற்றம் அவர்களுக்கு ஏற்படும். ஆண்டின் பிற்பகுதியில் சிறிது தடைகள் ஏற்படலாம். புதுமணத் தம்பதிகளுக்கு நல்ல செய்தி கிட்டும். ஆண்டு இறுதியில் தனுசு ராசியில் சூரியன் இடம்பெயர்வதால், குழந்தைப் பேறுக்கான சரியான சமயமாக அது அமையும்.
திருமணமாகாதவர்கள், இந்த ஆண்டில் தங்கள் வாழ்க்கைத் துணையை சந்திக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள். குழந்தைகளின் திருமணம் தடைபட்டு வந்தால், அந்தத் தடைகள் இந்த ஆண்டு விலகும். திருமணத்துக்கு அருள்புரியும் குரு, உங்கள் ராசியின் பதினோராவது இடத்தில் இருந்து இந்த ஆண்டின் பெரும்பாலான நாட்கள் ஆட்சிபுரிவதால், திருமணம் கைகூட ஏதுவான காலம் வரும்.