திருவண்ணாமலை

“மாட்னா காலி… மாட்ற வரை ஜாலி…” திருவண்ணாமலை குபீர் சாமியார்கள்

நினைக்க முக்தி தரும் திருத்தலமாம் திருவண்ணாமலை. ஆனா, திருவண்ணாமலை மக்களை இப்போ நினைச்சா “என்னதாண்டா ஆச்சு உங்களுக்கு..?” அப்படின்னு இருக்கு? என்னடா பிரச்னை…? ஒரு ஊர்ல வாக்கிங் போக பல இடங்கள் இருக்கும். ஆனா, ஒரு ஊரையே வாக்கிங் போக பயன்படுத்துற அளவுக்கு வசதியான் ஊர்காரங்க மேல உங்களுக்கு என்ன காண்டுனு கேக்குறீங்களா..? திருவண்ணாமலையில் எடுக்கப்பட்ட ஒரு வீடியோ கொஞ்ச நாளைக்கு முன்னாடி வைரல் ஆச்சு… அதைப் பார்த்ததும் தான், இந்த திண்ணாமலைக்காரங்க மேல ஒரு காண்டு.

அப்பரோ, சம்பந்தரோ பல நூற்றாண்டுகள் முன்னாடி திருவண்ணாமலை வந்தப்போ இந்த ஊரே ஒரு சிவலிங்கங்களால் ஆனது, இந்த ஊரை என் பாதத்தால் மிதிக்க மாட்டேன். தலைகீழாகத்தான் நடப்பேன்னு வலம் வந்திருக்கார். ஆனா, இப்போ சமீப காலத்துல திருவண்ணாமலைக்குப் போனால், திரும்புற பக்கமெல்லாம் ஒரு சாமியார்னு… ஊரே சாமியார்கள் மயமாகி இருக்கு.

திருவண்ணாமலை
திருவண்ணாமலை

மனநிலை பாதிப்புக்கு உள்ளானவரையோ, மனநிலை சீர்குலைந்தவரையோ பார்த்தா ஒரு அறிவார்ந்த சமூகம் என்ன பண்ணனும்…? அவங்களுக்கு சிகிச்சை கொடுக்கனும்… அவங்களை அக்கறையுடன் பராமரிக்கனும். ஆனா, நம்ம நாட்டில் அப்படியெல்லாம் பண்ண மாட்டோம்… ஆதரவற்ற மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் தெருக்களில் அலையவிடுற அவலநிலை தான் இருக்கு. நாடு முழுக்க இதுதான் நிலைமை. ஆனா, இந்த திருவண்ணாமலை காரங்க அப்படி பாதிப்புக்கு உள்ளானவங்களை நடத்துற விதம் தான் நாம காண்டாக காரணம்.

மேலே ஒரு வீடியோ சொன்னென்ல… அது என்னன்னா மத்திம வயதுடைய, மனநிலை பாதிப்புக்குள்ளான, அழுக்கான உடையணிந்து, ஜிகிடு கட்டிய முடியுடன் ஒரு பெண் தெருக்களில் வலம் வர… அந்தப் பெண்ணொட காலடியில் பொதுமக்கள் விழுந்து கும்பிடுறாங்க… படையல் வைக்குறாங்க… உணவுப்பொருள்கள் வைக்குறாங்க… அந்தப் பெண்ணும் ஏதோ சொல்லிட்டு தேவைன்னா அந்தப் பொருள்களை எடுத்துகிட்டுப் போறாங்க… இன்னும் சில பல மாதங்களில் அந்தப் பெண்ணும் ஒரு சாமியார் ஆகிடுவாங்க அல்லது ஆக்கப்படுவாங்க…

கிரிவலம் வர பாதை முழுக்கவே மாசத்துல ரெண்டு நாள் தவிர மீதி நாள்கள் எல்லாம் உள்ளூர் மக்கள் வாக்கிங் போற பாதையாத்தான் பயன்படுத்திட்டிருக்காங்க. சில வருஷங்கள் முன்னாடி, அந்தப் பக்கம் நானும் வாக்கிங் போகும் போது காலை சமயம்னா ஒருத்தர் உடல் முழுக்க திருநீரை அள்ளிப்பூசிகிட்டு ஜடா முடியோட clockwise சுத்திகிட்டிருப்பார், மாலை வேலையில் பார்க்கும் போது Anti clockwise-ல மலையை சுத்திகிட்டிருப்பாரு… யாரோடவும் எதுவும் பேசமாட்டார். யாருக்கும் அருள் வாக்கு கொடுக்க மாட்டார். சிரிக்க மாட்டார், முறைக்க மாட்டார். பத்து வருஷம் கழிச்சுப் பார்த்தா… அவரோட வாக்கிங் மிஸ், என்னன்னு தேடிப்பார்த்தா மலை சுத்துற வழியில் ஒரு குடிசையில் அவர் உட்கார்ந்துட்டார்… அவருக்கும் வயசாகும்ல, கால் வலிக்கும்ல… சில அன்பர்கள் அவருக்கு ஒரு குடிசையைப் போட்டு உட்கார வைச்சுட்டாங்க… பக்தர்களும் தினமும் அவரைப் பார்த்துட்டுப் போறாங்க… இப்போவும் யாரோடவும் எதுவும் பேசமாட்டார். யாருக்கும் அருள் வாக்கு கொடுக்க மாட்டார். சிரிக்க மாட்டார், முறைக்க மாட்டார்… அப்படி எதுவும் செய்துட்டா தங்களுக்கு அருள் கிடைச்சுட்டதா பக்தர்கள் நெஞ்சம் நிறைஞ்சுடுறாங்க.

Also Read – ‘புரோட்டா’ அமைச்சர்… ‘எகிறும்’ எடப்பாடி.. ‘விஸ்வரூப’ கமல்… ‘சிங்கிங்’ சீமான்.. ஈரோடு சுவாரஸ்யங்கள்!

இதே மாதிரி இன்னொரு முதியவர். அதே கிரிவலப் பாதையில் சில ஆண்டுகள் முன்பு சில கோயில் தாழ்வாரங்களில் தஞ்சமடைந்தார். யாரோ ஒரு அன்பர் ஒரு குறிப்பிட்ட நிறத்துல சால்வையைப் போர்த்த, அந்த சாமியாருக்கு அந்த சால்வை தான் அணியக் கொடுக்கனும்னு மாத்தி விட்டுட்டாங்க… அவரும் பக்தர்கள் அன்பை அமைதியா ஏத்துகிட்டார். அவருக்கு பொதுமக்கள்ல இருந்து பெரிய பெரிய தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் வரைக்கும் அவர் அருள் வேண்டி அங்க படையெடுக்க ஆரம்பிச்சுட்டாங்க. (அந்த அரசியல்வாதி இப்போ கூப்புல உட்கார்ந்திருக்கார்ங்க்றது வேற விஷயம்.) சில வருஷங்களில் அவர் மரணமடைய இப்போ அவரைத் தேடிப்பார்த்தா, அவருக்கு ஒரு நினைவிடம் உருவாக்கி கோயிலை கட்டிவச்சிருக்காங்க. 2050-ம் ஆண்டு வாக்குல நீங்க திருவண்ணாமலை போகும் போது ஒரு பெரிய ஆன்மிக வியாபாரத்தலமா அந்த இடத்தைப் பார்க்கலாம்.

இதெல்லாம் ஒன்று இரண்டு உதாரணங்கள் மட்டும் தான். பக்தர்கள் அருள்வாக்குக் கேட்டால், கெட்ட கெட்ட வார்த்தைகளில் அருளுரை வழங்கும் சாமியார். எச்சில் துப்பி ஆசி வழங்கும் சாமியார். முறைத்துப் பார்த்து அருள் வழங்கும் சாமியார். அமைதியா இருக்க சாமியார். ஆர்ப்பாட்டமா எதையாச்சும் உளறிக்கொட்டும் சாமியார்னு திருவண்ணாமலையில் எக்கச்சக்க சாமியார்கள். பொறுமையாக யோசித்தால், இந்த எல்லா குணங்களும் மனநிலை சிதைவடைந்த, சிதைவை நோக்கிச் சென்றுகொண்டு இருக்கும் நபர்களின் குணங்கள்.

திருவண்ணாமலை
திருவண்ணாமலை

திருவண்ணாமலை கிரிவலப்பாதையும், அங்கு தங்குவதற்குக் கிடைக்கும் இடங்களும், எண்ணிலடங்காத கோயில்களில் கிடைக்கும் அண்ணாதானமும், பக்தர்களின் அன்புக் காணிக்கைகளும் ஆதரவற்றவர்களையும், மனநிலை பாதிப்புக்குள்ளானவர்களையும், துறவறம் பூண்டவர்களையும் திருவண்ணாமலையை நோக்கி தஞ்சம் புக வைக்கிறது. திருவண்ணாமலை வாசிகளின் பக்தியும் பரிவும் இவர்களுக்குக் கூடுதல் போனஸ். உள்ளூர் பக்தர்கள் இப்படியான குபீர் சாமியார்களை உருவாக்கியும் போற்றியும் வளர்க்க, மாதாமாதம் பௌர்னமி நாளில் பல ஊர்களில் இருந்தும் கிரிவலம் வரும் நபர்கள் இந்தச் சாமியார்களின் புகழைப் பல மடங்குப் பெருக்கி விட்டுவிடுகிறார்கள்.

மக்களின் அறியாமையும் எதைத்தின்றால் பித்தம் தெளியும் என்ற மனநிலையும் தான் இத்தகைய குபீர் சாமியார்களின் எழுச்சிக்கு முதல் காரணம். ஆனால், சிலரின் பேராசையும் சம்பாதிக்கும் வெறியுமே இத்தகையவர்களை மேலும் பிரம்மாண்டமாக வளர்த்துவிடுகிறது.

சொல்லப்போனால், நூறு ஆண்டுகள்க்கு முன்பு ரமண மகரிஷி மதுரையில் இருந்தும் கிளம்பி திருவண்ணாமலை வந்து தஞ்சமடைந்த போதும் அவர் தேடிய ஆன்மிகத் தேடலுக்கு விடை இங்கு கிடைத்தது, உள்ளூர் வாசிகளின் பக்தியும் பரிவும் அவருக்குக் கிடைத்தது. ரமணர் விருபாக்‌ஷா குகையில் தியாணம் செய்தபோது அவருடைய சீடர் ஒருவர் அப்போதே டிக்கெட் போட்டு வசூல் வேட்டையில் இறங்கி இருக்கிறார். அது தெரிய வந்தபோது கடுப்பான ரமணர் அந்தக் குகையில் இருந்து வெளியேறி இருக்கிறார். அந்தச் சீடர் மனந்திருந்தி அந்த வேலையை விட்டிருக்கிறார். இப்படியான ஆதயத்துக்கு பலியான அப்பாவிச்சாமியர்களும் ஏராளம்.

இன்னொரு பக்கம், இந்தச் சாமியார்கள் எல்லாம் சோஷியல் மீடியாவில் வைரலாகி எக்ஸ்போஸ் ஆகிடுறாங்க… அதனால, கொஞ்ச நாள்ல இப்போலாம் சிலர் காலாவதியாகிடுறாங்க. அது ஒரு வகையில் சந்தோஷம் தான். மாட்டுற வரைக்கும் அவங்களும் ஜாலி பண்ணிகிட்டு நம்ம மக்களும் ஜாலி பண்ணிகிட்டு சுத்துறாங்க… இன்னொரு பக்கம் கைலாயத்து அதிபர் நித்தியாணந்தாவும் எங்க ஊர்ல இருந்து வந்தவர்தான் அவர் மாட்டின பிறகும் அவரும் ஜாலியாத்தான் இருக்கார்… மக்களும் இன்னமும் ஊருக்குள்ள அவரைக் கொண்டாடிகிட்டி இருக்காங்க.

கருமாரி, திசைமாறி, உருமாறி, நிலைமாறி, தடுமாறி வந்தவர்களுக்கு அருள்வாக்கை அள்ளி வழங்கடி தாயேனு இன்னும் எத்தனை ஆத்தாக்கள் வர்ற கொடுமையெல்லாம் நாம பார்க்கணுமோ?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top