“நீங்க எந்த டி.வி…?”, “மைக்கைத் தூக்கி அடிச்சிருவேன் பாத்துக்க…”, “யார்ரா அது உள்ள எவன்டா கத்துறது, இருக்குறவன்லாம் சொம்பைகளா”… கொஞ்ச காலத்துக்கு முன்னாடி இப்படியெல்லாம் பேசி ட்ரோல் மெட்டீரியலுக்கு ஆளானவர், நம்ம கேப்டன் விஜயகாந்த். இன்னைக்கு இருக்குற 2கே கிட்ஸ்க்கு இவரை கோபப்படுற ஒரு மீம் மெட்டீரியலாத்தான் தெரியும். 90’ஸ் கிட்ஸ்க்கு கூட ஒரு நடிகராத்தான் தெரியும். ஆனா நடிகர், அரசியல்வாதி, கோபப்படுறவர்னு பல முகங்களைத் தாண்டி இவருக்கு இன்னொரு பக்கமும் இருக்கு. அதைத்தான் இப்போ பார்க்கப்போறோம்.
சின்சியாரிட்டிக்கு இன்னொரு பெயர் விஜயகாந்த்!
சரியான நேரத்துக்கு மேக்கப் எல்லாம் போட்டு முடித்து சரியான நேரத்துக்கு வந்துவிடுவார் விஜயகாந்த். ஒருமுறை எஸ்.பி ஜனநாதன் உதவி இயக்குநரா வேலை பார்த்த நேரத்துல “சார்… ஷாட் ரெடி”னு விஜயகாந்த்கிட்ட சொல்லப் போயிருக்கார். அப்போ விஜயகாந்த் ஒரு அமைச்சரிடம் பேசிக்கொண்டிருந்திருக்கிறார். ஷாட்டுக்கு எஸ்.பி.ஜனநாதன் அழைக்க, கொஞ்ச நேரம் கழிச்சு பேசுறேன்னு சொல்லி போனைக் கட் பண்ணிட்டு ஷாட்டுக்கு வந்துட்டார்.
அதேபோல அலக்சாண்டர் எடுத்துகிட்டிருந்த நேரம், மொத்த யூனிட்டும் சி.ஜி லைட்டுக்காக லைட் செட் செய்ய கொஞ்சம் டைம் எடுத்துகிட்டு இருந்திருக்காங்க. இரண்டுமுறை உதவியாளர அனுப்பி ஷாட் ரெடியான்னு கேட்க சொல்லியிருக்கார், விஜயகாந்த். கொஞ்ச நேரம் பொறுங்கன்னு பதில் சொல்லி அனுப்பியிருக்கார், ஜனநாதன். அதைக் கேட்ட விஜயகாந்த், திடீரென கேமரா முன்னால வந்து நின்னுருக்கார். சார் டைம் வேஸ்ட் பண்ண வேணாம், ஷாட் ஓகேன்னா போய்டலாம். எல்லோருக்கும் வேலைக் கெடுதுனு சொல்லி வேலையை துரிதப்படுத்தியிருக்கார். அதேபோல் எப்போ ஷூட்டிங்னாலும் ஷாட் ரெடியானு டைரக்டர்கிட்ட அடிக்கடி கேட்கும் நபர் விஜயகாந்த். கடைசி வரைக்கும் டைரக்டர் என்ன சொல்றாரோ அதை மட்டும் கேட்டுக்கிட்டு நடிச்சவர். பாரபட்சம் பார்க்காமல் உதவி இயக்குநர்கள், லைட்மேன்கள் என சக கலைஞர்களுடன் படுத்து உறங்குவார்.
இன்னைக்கு டைரக்டர் கூப்பிட்டா போலாம்னு இருக்குற ஹீரோக்கள் சின்சியாரிட்டிய இவர்கிட்ட கத்துக்கணும் பாஸ்.
கர்ணனின் குணம்!
எம்.ஜி.ஆர் தன்னைப் பார்க்க யார் வந்தாலும் அவர்களைச் சாப்பிட வைக்காமல் திருப்பி அனுப்பமாட்டார். அவரைத் தொடர்ந்து அந்த பழக்கத்தைக் கடைபிடித்தவர். அதற்கு தி.நகர் ராஜாபாதர் தெருவில் இருந்த விஜயகாந்த் அலுவலகமே சாட்சி. எம்ஜிஆரின் திரை வாரிசாக பல நடிகர்களும் தங்களை காட்டிக் கொண்டாலும், கறுப்பு எம்ஜிஆர் என திரை உலகிற்கு உள்ளேயும், வெளியேயும் பலராலும் அழைக்கப்பட்டு கொண்டாடப்பட்டவர். பட ஷூட்டிங்கில் தொழிலாளர் எல்லோருக்கும் வயிறார சாப்பாடு போட்டவர் விஜயகாந்த்.
ஒரு நாள் வருமான வரித்துறை காலை 9 மணிக்கு ஆரம்பித்து இரவு 10 மணிக்கு விஜயகாந்த் வீட்டை சோதனை போட்டிருக்கிறது. அது முடியும்போது தலைமை அதிகாரி ராபர்ட் ‘ சார் உங்களைத் தொல்லை பண்ணனும்னு நாங்க நினைக்கலை. இது எங்க டூட்டி. உங்க ரெக்கார்ட்சை பார்க்குறப்போ எவ்ளோ நல்லது பண்ணியிருக்கீங்கனு தெரியுது. அதை எப்பவுமே நிப்பாட்டிடாதீங்க’னு சர்டிபிகேட் கொடுத்துட்டு போனார். வருமான வரித்துறையினரே மிரண்டுபோன ரெய்டு அதுவாகத்தான் இருக்கும். என்றைக்குமே ‘மடியில கனமில்ல, வழியில பயமில்ல’ங்குற வார்த்தையை எல்லா மேடைகளிலும் சொல்பவர் விஜயகாந்த். அதை தன் வாழ்க்கைல கடைபிடிக்கவும் செய்வார். அதேபோல இவர் பிறருக்கு உதவும் செயல்களிலும் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். தனது பிறந்தநாளை ஒவ்வொரு ஆண்டும் வறுமை ஒழிப்பு தினமாகக் கொண்டாடி வருகிறார்.
சீட்டாட்டம்!
விஜயகாந்த் ஆடும் சீட்டாட்டத்துக்கு பின்னால் ஒரு கதை இருக்கிறது. உதவி இயக்குநர்கள், தொழிலாளர்களை சீட்டாட அழைப்பார். பந்தயமும் கொஞ்சம் பெரியதாக இருக்கும். விளையாட்டில் ஆரம்பத்தில் விஜயகாந்த் ஜெயிப்பதுபோலவே இருக்கும். ஆனால் முடிவில் தோற்றுவிடுவார். இதற்காக என்றுமே அவர் கவலைப்பட்டதில்லை. தான் ஆட்டத்துக்காக கட்டிய பணத்தை முழுமையாக எதிராக ஆடுபவருக்கு கொடுத்துவிடுவார். பெரிய தொகையை கட்டும்போதெல்லாம் ஏமாறுவது கேப்டனின் வாடிக்கை. ஷூட்டிங்கில் குடும்பம் மற்றும் அவசரத் தேவைகளுக்காக பணம் தேவைப்படும் தொழிலாளர்கள் கேப்டனிடம் கேட்க கூச்சப்பட்டும், தன்மானம் கருதியும் ஒதுங்கி நிற்பார்கள். அதனை தெரிந்து கொண்ட அவர் சீட்டாட்டத்துக்கு அழைத்து விளையாடினால், வேண்டுமென்றே தோற்று பணத்தை தொழிலாளர்களுக்கு கொடுத்து விடுவார். உதவி தேவைப்பட்டு தன்மானம், கூச்சம் கருதி கஷ்டப்படும் தொழிலாளர்களுக்கு பணத்தைக் கொடுக்க கேப்டன் யூஸ் பண்ணின இன்னொரு வழிதான் சீட்டாட்டம். அதேபோல சீட்டாட்டத்தில் போங்கும் அடிப்பார். சீட்டு விளையாடுவதற்கு முன்னரே 13 கார்டுகளை சேர்த்து தனியாக வைத்துக் கொண்டு டிக் அடித்து ஜெயித்து விடுவாராம். மற்றவர்களிடம் பணத்தை வசூல் செய்து விளையாடிய எல்லோருக்கும் பிரியாணி வாங்கிக் கொடுக்கும் பழக்கமும் இருந்தது. என்றைக்குமே கொடுத்துப் பழக்கப்பட்ட கை விஜயகாந்தினுடையது.
Also Read : `அவங்க ரெண்டு பேரும் எனக்கு செய்வினை வைத்துவிட்டார்கள்’ – புலம்பும் விஜயகாந்த்
அதேபோல பிலிம் இன்ஸ்ட்யூட்டில் இருந்து வந்த 16 பேரை இயக்குநராக அறிமுகப்படுத்தியது..சமகால போட்டி நடிகர்களுக்கு பிரச்னை என்றால் முதல் ஆளாக வரும் நபர், நடிகர் சங்க கடனை அடைத்தவர், தொழிலாளர்களுக்காக டீ வாங்கிக் கொடுப்பவர், ஈழ மக்களுக்காக குரல் கொடுத்தது, மகனுக்கு பிரபாகரன் எனப் பெயர் வைத்தது, சிறந்த குடிமகன் விருது பெற்ற ஒரே நடிகன், ரசிகர்களை உயிராக நினைத்தவர்.. இப்படி அவரது இன்னொரு பக்கத்தைப் பற்றிச் சொல்ல ஒரு வீடியோ பத்தாது. அவர் பற்றி யாரிடம் பேட்டி எடுத்தாலும் ‘மனுஷன்யா’ என்று சொல்லித்தான் ஆரம்பிப்பார்கள்.
விஜயகாந்துக்கு முன்னால் நல்ல மனிதர்கள் இருந்திருக்கலாம்… இவருக்குப் பின்னாலும் இருக்கலாம்.. ஆனால் இவரைப் போல இருக்க முடியாது. இவரால் வாழ்ந்தவர்கள் பலர்.. இவரால் கெட்டவர்கள் என்று சுட்டிக்காட்ட யாருமில்லை. பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் காட்சிப்படுத்தப்படும் கேப்டனுக்கும், பொது வாழ்வில் இருக்கும் கேப்டனுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு.