கலைஞர் பிறந்தநாளான ஜூன் 3-ஆம் தேதி அரசு விழாவாக க் கொண்டாடப்படும் என்றும், அதற்கு முன்னதாக, சென்னை ஓமந்தூரர் அரசினர் தோட்டத்தில் மே-28 ஆம் தேதி கலைஞரின் புதிய சிலை ஒன்று திறக்கப்படும் என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதையடுத்து வேகமாக வேலைகள் நடைபெற்று, தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க-வின் முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதி சிலையைத் திறந்து வைக்க துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடுவின் தேதியும் வாங்கப்பட்டுவிட்டது. ஜனாதிபதி தேர்தலைச் சந்திக்க உள்ள நேரத்தில், தி.மு.க-வின் தயவும் தேவை என்பதால், துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடுவின் ஒப்புதலும் எளிதாக கிடைத்துவிட்டது. தற்போது, விழாவிற்கான வேலைகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
ஆனால், கலைஞரின் சிலையை தங்கள் கட்சியைச் சேர்ந்த துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு திறந்து வைப்பதில், தமிழ்நாடு பி.ஜே.பி-யில் யாருக்கும் உடன்பாடும், விருப்பமும் இல்லை. குறிப்பாக, தமிழ்நாடு பி.ஜே.பி-யின் முன்னோடிகளாக உள்ள ஹெச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழ்நாடு பி.ஜே.பி-யின் மாநிலத் தலைவர் அண்ணாமலை என அனைவருக்கும் இதில் ஒரே கருத்துத்தான். ஆனால், யார் அதைப் பொதுவெளியில் வெளிப்படுத்துவது என்பதுதான் இப்போது தமிழ்நாடு பி.ஜே.பி-க்குப் பெரிய பிரச்சினையாக உள்ளது. அதனால்தான், தமிழ்நாடு பி.ஜே.பி-யில் உள்ள யாரும் இதுவரை தங்கள் அதிருப்தியை வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை.
இதில், மற்றவர்களை விட அண்ணாமலைக்கு அதிக சிக்கல் உள்ளது. குறிப்பாக தி.மு.க-வை விமர்சிப்பதைவிட, கலைஞர் குடும்பத்தினரை குறிவைத்துத் தாக்கிக் கொண்டிருக்கும் அண்ணாமலைக்கு, வெங்கய்ய நாயுடுவின் வருகை அதிக சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. காரணம், அந்த விழாவில், தானும் நிச்சயம் கலந்து கொள்ளக் கூடிய சூழல் ஏற்படும் என்பதும், அப்படிக் கலந்து கொண்டால், பார்வையாளர்களோடு ஒருவராக அமர நேரிடும் என்பதும்… எதிர்காலத்தில் அண்ணாமலையின் விமர்சனங்களை, இந்த நிகழ்வை வைத்தே தி.மு.க-வினர் எதிர்கொள்வார்கள் என்பதும், நீங்கள் என்ன விமர்சனம் செய்தாலும், டெல்லித் தலைமையே எங்களோடு நெருக்கமாக உள்ளது என்று தி.மு.க-வினர் சொல்லாமல் சொல்வது போல என எல்லாவகையிலும் அண்ணாமலைக்கு, கலைஞர் சிலை திறப்பு பெரிய பின்னடைவாக அமைந்துவிடும் என்று அவர் பயப்படுகிறார்.
இதையடுத்து, தமிழ்நாடு பி.ஜே.பி-யின் மூத்த தலைவர்களோடு, தனது ஆதரவாளர்கள் மூலம் தொடர்ந்து அண்ணாமலை பேசிக் கொண்டிருக்கிறார். அவர்களில் யாராவது ஒருவர், கருணாநிதியின் சிலையை வெங்கய்ய நாயுடு திறப்பதில் தங்களுக்கு உடன்பாடில்லை என்று பேசியோ… அறிக்கைவிடுத்து சர்ச்சையைக் கிளப்பினால், அதை வைத்து டெல்லி தலைமையிடம் பேசலாம் என்பது அண்ணாமலையின் திட்டம்.
ஆனால், தமிழ்நாடு பி.ஜே.பி-யில் உள்ள மூத்த தலைவர்கள், “வெங்கய்ய நாயுடு வருவதில் எங்களுக்கும் விருப்பம் இல்லை. ஆனால், அதை நாங்கள் ஏன் பொதுவெளியில் பேசி சர்ச்சைக்குள்ளாக்க வேண்டும். “மாநிலத் தலைவர் அண்ணாமலைதானே… அவர் மாநிலத் தலைவராக வந்தபிறகு, அவரைத் தவிர எங்கள் யாரையும் எந்த விஷயத்தைப் பற்றியும் கருத்துத் தெரிவிக்கக் கூடாது; தொலைக் காட்சிகளுக்கு பேட்டி கொடுக்கக் கூடாது என டெல்லி தலைமை மூலம் எங்களைக் கட்டுப்படுத்திவிட்டு, இப்போது இந்த விஷயத்தில் மட்டும் எங்களைப் பேச ச் சொன்னால் என்ன அர்த்தம்? கலைஞர் குடும்பத்தை தனிப்பட்ட முறையில் கடுமையாக விமர்சிக்கும் அண்ணாமலை இந்த விவகாரத்தையும் கையில் எடுத்து, கலைஞரின் சிலையை துணை ஜனாதிபதி திறந்து வைப்பதில் தமிழ்நாடு பாரதிய ஜனதாவுக்கு உடன்பாடில்லை என்று அறிக்கை விடச் சொல்லுங்கள். அதன் பிறகு வேண்டுமானால், அதை நாங்கள் ஆமோதித்து அறிக்கைவிடுகிறோம் என்று கறாராகச் சொல்லிவிட்டனர்.
இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில், என்ன செய்வதென்று தெரியாமல் கையைப் பிசைந்து கொண்டிருக்கிறார் அண்ணாமலை..
Also Read – புக் கிரிக்கெட் டு WWE கார்டு… 90ஸ் கிட்ஸின் மறக்கமுடியாத Classroom Games!