Karunanidhi

முதல் மேடைப்பேச்சு முதல் லண்டன் பிரஸ்மீட் வரை… கருணாநிதி குறித்த 13 துளிகள்!

தி.மு.க முன்னாள் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி 98-வது பிறந்த தினம் இன்று. கொரோனா சூழலால் அவரது பிறந்தநாளை விமரிசையாகக் கொண்டாட வேண்டாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

பள்ளிப் பருவத்திலேயே அரசியல் பாதையைத் தேர்வு செய்து படிப்படியாக வளர்ச்சியடைந்து தமிழகத்தின் முதலமைச்சராக உயர்ந்தவர். அண்ணா மறைவைத் தொடர்ந்து 1969-ல் தமிழக முதல்வரான அவர், 2011 வரையில் ஐந்து முறை அந்தப் பதவியை அலங்கரித்திருக்கிறார். மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி என்று முழங்கிய அவர், தேசிய அளவில் சுதந்திர தினத்தன்று தேசியக்கொடி ஏற்றிய முதல் முதலமைச்சர் என்ற பெருமை பெற்றவர்.

Anna - Karunanidhi
Photo – Karunanidhi.dmk.in

கருணாநிதி பற்றிய 13 சுவாரஸ்யத் தகவல்கள்!

 1. மேடைப்பேச்சில் வித்தகரான கருணாநிதியின் முதல் மேடைப்பேச்சு எட்டாம் வகுப்பு மாணவராக (1939) இருந்தபோது நிகழ்ந்தது. பேச்சுப்போட்டியில் `நட்பு’ என்ற தலைப்பில் அவர் பேசினார்.
 2. கருணாநிதியின் அரசியல் குருவாக இருந்தவர் நீதிக்கட்சியைச் சேர்ந்த அழகிரி. அவரது கருத்துகளால் ஈர்க்கப்பட்டு அரசியலுக்கு வந்தவர், தனது மகனுக்கு அழகிரி என்று பெயர் சூட்டினார்.
 3. அவர் எழுதி முதன்முதலில் அரங்கேற்றப்பட்ட நாடகம் `பழனியப்பன்’. அந்த நாடகம் 1944-ல் திருவாரூர் பேபி டாக்கீஸில் அரங்கேற்றம் கண்டது.
 4. 1950-70 வரை தமிழ் திரையுலகில் கோலோச்சிக் கொண்டிருந்த சிவாஜி – எம்.ஜி.ஆர் என இரு ஆளுமைகளுக்கும் பல வெற்றிப்படங்களைக் கொடுத்தவர் கருணாநிதி. சிவாஜிக்கு பராசக்தி, மனோகரா. எம்.ஜி.ஆருக்கு மந்திரகுமாரி, மலைக்கள்ளன்.
 5. கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன், 1959ம் ஆண்டு முதல் அவரிடம் பணியாற்றி வந்தார். ஐம்பாதாண்டுகளுக்கும் மேலாக அவரிடம் உதவியாளராக இருந்த சண்முகநாதன் இடையில் இரண்டு முறை கோபித்துக் கொண்டு வெளியேறி, பின்னர் சமாதானமாகி மீண்டும் பணியில் சேர்ந்திருக்கிறார்.
 6. கருணாநிதி எழுதிய 21 நாடகங்களில் `தூக்குமேடை’ நாடகத்துக்கு ஒரு சிறப்பு இருக்கிறது. இந்த நாடகத்தைப் பார்த்தே நடிகவேள் எம்.ஆர்.ராதா, அவருக்கு கலைஞர் என்ற பட்டத்தை அளித்தார்.
 7. 1957-ம் ஆண்டு குளித்தலை தொடங்கி 2016-ல் திருவாரூர் வரை தான் போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் தோல்வியையே சந்திக்காத இந்தியாவின் ஒரே தலைவர்.
 8. 33 வயதில் எம்.எல்.ஏ, 45 வயதில் முதலமைச்சர் பொறுப்பேற்ற அவர், தமிழக சட்டப்பேரவையில் தி.மு.க சட்டமன்ற கொறடா, எதிர்க்கட்சித் துணைத் தலைவர், பொதுப்பணித் துறை அமைச்சர், முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்திருக்கிறார்.
 9. 1962 தேர்தலில் தஞ்சாவூர் தொகுதியில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பரிசுத்த நாடார் வீட்டுக்குத்தான் கருணாநிதி முதன்முதலில் வாக்கு சேகரிக்கச் சென்றதாகச் சொன்னார் அந்தப் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர்.
 10. 1977-ல் அ.தி.மு.க-வைத் தொடங்கி எம்.ஜி.ஆர் முதல் தேர்தலிலேயே ஆட்சியைப் பிடித்தபோதும், அண்ணா நகர் தொகுதியில் 16,438 வாக்குகள் வித்தியாசத்தில் கருணாநிதி வென்றார்.
 11. ராஜீவ் காந்தி மரணத்துக்குப் பிறகு நடைபெற்ற 1991 தேர்தலில் ஜெயலலிதா முதல்வரானார். அந்தத் தேர்தலில் தி.மு.க சார்பில் துறைமுகம் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதி, எழும்பூரில் பரிதி இளம்வழுதி என இரண்டு பேர் மட்டுமே வெற்றிபெற்றனர்.
 12. கருணாநிதி முரசொலியில் `உடன்பிறப்பே’ என்ற தலைப்பில் தி.மு.க தொண்டர்களுக்கு அவர் எழுதிவந்த கடிதத் தொடர் உலகிலேயே நீளமான தொடராகவும் சொல்லப்படுகிறது. முரசொலி தொடங்கப்பட்டதிலிருந்து 2016ம் ஆண்டு உடல்நலக் குறைவு ஏற்படும் வரையில் தொடர்ச்சியாக அந்தத்தொடரை எழுதி வந்தார்.
 13. கருணாநிதி செய்தியாளர் சந்திப்புகளை நகைச்சுவையுணர்வோடு கொண்டுபோவதில் பெயர் பெற்றவர். தமிழகம் மட்டுமல்லாது 1970-ம் ஆண்டு லண்டனிலும் ஒரு செய்தியாளர் சந்திப்பைக் அவர் நடத்தினார். பாரீஸில் நடந்த மூன்றாவது உலகத் தமிழ் மாநாட்டுக்குச் செல்லும் வழியில் அந்த பிரஸ்மீட் நடந்தது.

Also Read – அண்ணா, கருணாநிதிக்குப் பிறகு தி.மு.கவின் 3-வது முதல்வர் – ஸ்டாலின் அரசியல் பயணம்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top