மாடர்ன் தியேட்டர்ஸ்

ஹாலிவுட் சினிமா எடுத்த தமிழ் சினிமா கம்பெனி… மாடர்ன் தியேட்டர்ஸின் கதை!

தமிழ் சினிமா வரலாற்றில் பல படத்தயாரிப்பு நிறுவனங்கள் இருந்திருக்கின்றன, இருக்கின்றன. ஆனால், தமிழ் சினிமா வரலாற்றில் எப்போதுமே தவிர்க்க முடியாத ஒரு படத் தயாரிப்பு நிறுவனம் மாடர்ன் தியேட்டர்ஸ். சேலம் மாநகரின் மிகப்பழைமையான அடையாளங்களுள் ஒன்று. எம்.ஜி.ஆர் முதல் முதலாக வாள் சண்டையிட்ட இடம், முன்னாள் முதல்வர் கருணாநிதி மாத சம்பளத்துக்கு வேலை பார்த்த இடம், தமிழ் மற்றும் கன்னடத்தின் முழுநீள வண்ணக் கலர் சினிமா உருவான இடம், மலையாளத்தின் முதல் பேசும்படம் உருவான இடம், தமிழ் சினிமாவின் முதல் இரட்டை வேடப்படம் உருவான இடம், என்.டி ராமாராவ், என் ஜானகி, எம்.ஆர்.ராதா என பல ஆளுமைகள் தங்களின் ஆரம்பக்கட்ட வாழ்க்கையைத் தொடங்கிய இடம், ஹாலிவுட் இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர்களைக் கொண்டுவந்தது என பல பெருமைகள் மாடர்ன் தியேட்டர்ஸ்க்கு உண்டு. அதோட சிறப்புகளைத்தான் இந்த வீடியோவுல பார்க்கப் போறோம்.

தொடக்க காலம்!

1935-ம் ஆண்டு டி.ஆர்.சுந்தரம் என்பவரால் தொடங்கப்பட்டது மாடர்ன் தியேட்டர்ஸ். சென்னைக்கு வெளியே தொடங்கப்பட்ட ஸ்டூடியோக்களில் மிக நீண்டகாலம் இயங்கி அதிக வெற்றிப்படங்களை கொடுத்த நிறுவனம் என்ற பெருமையும் மாடர்ன் தியேட்டர்ஸுக்கு உண்டு. ஜவுளித் தொழில் தொடர்பாக லண்டனில் உயர்கல்வி பெற்றிருந்தார் சுந்தரம். ஆனாலும், அவருக்கு சினிமாவின் மீது இயல்பாகவே ஒரு ஈர்ப்பு இருந்தது. லண்டனிலிருந்து சேலம் திரும்பியவுடன், அப்போது சேலத்தில் இருந்த படத்தயாரிப்பு நிறுவனமான ஏஞ்சல் ஃபிலிம்ஸுடன் இணைந்து இரண்டு படங்களைத் தயாரித்தார்.1930களின் தொடக்கத்தில் சினிமா தயாரிப்பு தொழிலில் கொல்கத்தாதான் கோலோச்சிக்கொண்டிருந்தது. சினிமா தயாரிப்பு தொடர்பான எல்லா வேலைகளுக்கும் கொல்கத்தா செல்ல வேண்டி இருந்தது. அதற்கு மாற்றாக சேலத்திலேயே ஒரு ஸ்டூடியோ தொடங்கினால் என்ன? என்ற டி.ஆர்.எஸ்ஸின் எண்ணத்தில் சேலம் -ஏற்காடு ரோட்டில் 10 ஏக்கர் பரப்பளவில் படப்பிடிப்பு தளம், பாடல் பதிவு செய்யும் ரெக்கார்டிங் ரூம், ஒரு லேப் என ஒரு முழுப்படத்தையும் பதிவு செய்வதற்கான அத்தனை அம்சங்களுடனும் பிரமாண்டமாக உதயமானது மாடர்ன் தியேட்டர்ஸ். 1937-ல் தனது முதல் படமான `சதிஅகல்யா’வைத் தயாரித்தது. பிற்காலத்தில் மிகவும் புகழ் பெற்று விளங்கிய இலங்கைக் குயில் தவமணி தேவிதான் இந்தப்படத்தின் கதாநாயகி. 1938-ல் மலையாள மொழியின் முதல் பேசும் படமான ‘பாலன்’ தயாரிக்கப்பட்டது. இந்த இரண்டு படங்களுமே மாடர்ன் தியேட்டர்ஸுக்கு வெற்றிகரமான தொடக்கமாக அமைந்தன.

கொள்கை!

சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தை டி.ஆர்.சுந்தரம் ஒழுங்கு கட்டுப்பாட்டுடன் ஒரு தொழிற்சாலையைப் போல நடத்தலானார். திரைப்படம் மூலமாகப் பிரச்சாரம் செய்வது, சமூக சீர்திருத்தம் இப்படிப்பட்ட எண்ணங்கள் ஏதுமின்றி மக்கள் விரும்பிப் பார்த்து மகிழும்படியான பொழுதுபோக்குப் படங்களைத் தரமாகக் கொடுக்க வேண்டுமென்பது தான் இவரின் நோக்கமாக இருந்தது. திரைப்படம் என்பது மக்களை மகிழ்விக்க வந்த ஒரு சாதனம், அதில் பொழுதுபோக்கும், மகிழ்ச்சியும்தான் இருக்க வேண்டும், தேவையில்லாத மற்ற பிரச்சினைகள் அதற்குள் தலையிடாமல் இருக்க வேண்டுமென விழிப்புடன் டி.ஆர்.சுந்தரம் தனது கொள்கைகளை நிறைவேற்றி வந்தார். படப்பிடிப்பு குறிப்பிட்ட தேதியில் தொடங்கி, குறிப்பிட்ட தேதியில் முடியவேண்டும் என்பதில் சுந்தரம் கண்டிப்பாக இருந்தார்.

கட்டுப்பாடுகள்!

சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தில் சுமார் 250 தொழிலாளர்கள் வேலை செய்தார்கள்.சுந்தரம் தமது நிறுவனத்தில் கடுமையான கட்டுப்பாடுகளை அமுல் படுத்தினார். நடிகைகள் உள்ள பகுதிக்கு, நடிகர்கள் போகக்கூடாது. கதை வசனம் முழுமையாகத் தயாரான பிறகுதான், நடிகர் நடிகைகள் யார் என்பது முடிவாகும். நன்றாக ஒத்திகை பார்த்த பிறகுதான் படப்பிடிப்பு தொடங்கும்.இங்கு நடிக்க வந்த நடிகர்கள் கூட ஒரு தொழிலாளர்களைப் போல சரியான நேரத்துக்கு வருவது, கட்டுப்பாட்டோடு பணியாற்றுவது, வீண் வம்பு, விவகாரம் இவற்றில் ஈடுபடாமல் தானுண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது என்று இருந்தார்கள். நடிகர், நடிகைகள் ஒப்பந்த முறையில் சேர்த்துக் கொள்ளப் பட்டார்கள். இதையெல்லாம் தாண்டி கடன் வாங்கி படம் எடுக்காத நிறுவனம் என்ற நற்பெயரும் மாடர்ன் தியேட்டர்ஸுக்கு இருந்தது.

எம்.ஜி.ஆர் – கருணாநிதி ஆரம்ப வாழ்க்கை!

இதே காலகட்டத்தில்தான் மு.கருணாநிதியும் திரைத்துறையில் வசனகர்த்தாவாக தனது பயணத்தை தொடங்கியிருந்தார். அவரது ஆரம்ப காலத்திலேயே கருணாநிதியின் திறமையை உணர்ந்து கொண்ட டி.ஆர்.எஸ், அவரை மாடர்ன் தியேட்டர்ஸின் கதை வசன இலாகாவில் பணிபுரியுமாறு அழைப்புவிடுத்தார். மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்து கருணாநிதி கதை வசனம் எழுதிய ‘மந்திரி குமாரி’ மாபெரும் வெற்றிப் படமாக அமைந்ததுடன் கருணாநிதி, எம். ஜி.ஆர் என இருவர் வாழ்க்கையிலும் மிகப்பெரிய திருப்புமுனையாகவும் அமைந்தது. இதையடுத்து தமிழில் முழுநீள வண்ணக்கலர் படத்தைத் தயாரிக்க முடிவு செய்தது மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம். `அலிபாபாவும் நாற்பது திருடர்களும்’ என்ற அரபு நில இரவுக் கதையொன்று தேர்வு செய்யப்பட்டது. மாடர்ன் தியேட்டர்ஸுடன் இணைந்து `மந்திரி குமாரி’, `சர்வாதிகாரி’ என்ற இரண்டு வெற்றிப்படங்களைத் தந்திருந்த எம்.ஜி.ஆர் இதற்கும் கதாநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

புதுமைகள்!

தன்னுடைய படங்கள், தொழில் நுட்பத்தில் சிறந்தவையாக அமைய வேண்டும் என்று சுந்தரம் விரும்பினார். ஜெர்மனியில் இருந்து ‘வாக்கர்’, ‘பேய்ஸ்’ என்ற இரண்டு ஒளிப்பதிவளர்களை வரவழைத்தார். இவர்கள் தந்திரக்காட்சிகள் எடுப்பதில் வல்லவர்கள். இவர்களிடம் பயிற்சி பெற்ற டபிள்யு.ஆர்.சுப்பாராவ், ஜே.ஜி.விஜயம் பிற்காலத்தில் புகழ் பெற்ற ஒளிப்பதிவாளர்களாகத் திகழ்ந்தனர். படத்தில் நடிகர் நடிகைகளின் பெயர்களையும், கலைஞர்களின் பெயர்களையும் காண்பிக்கும் முகப்புக் காட்சியில் படத்துக்குப்படம் புதுமையை சுந்தரம் புகுத்தினார். அதற்காக பெரும் பணம் செலவழித்தார்.அமெரிக்க இயக்குனரான எல்லிஸ் ஆர்.டங்கன், இவரது படங்களுக்கு இயக்குநராக அமைந்தார். ஆங்கிலம் பேசும் ஒரு அமெரிக்கர் தமிழில் படம் இயக்கியது அக்காலத்தில் ஓர் அதிசயமாகக் கருதப்பட்டது. டி.ஆர்.எஸ். தயாரிப்பில், எம்.ஜி.ஆரை வைத்து எல்லிஸ் ஆர்.டங்கன் 1950 இல் இயக்கிய படம் ‘மந்திரி குமாரி’. அதில் எம்.ஜி.ஆர் வாளெடுத்துப் போர் புரியும் அழகு மக்களால் ரசிக்கப்பட்டது. அந்தப் படத்தின் வசனங்கள் புதுமை, வேகம்,விறுவிறுப்பு கொண்டு சிறப்பாக விளங்கியது.

சாதனை சம்பவங்கள்!

தமிழ் சினிமாவின் முதன் இரட்டை வேட படமான உத்தமபுத்திரன் (1940), முதல் கலர் படமான அலிபாபாவும் நாற்பது திருடர்களும் (1956) மலையாளத்தில் முதல் பேசும்படமான பாலம் (1938) மற்றும் தமிழின் மிகப்பெரிய வெற்றிப்படமான மனேகரா போன்ற பல திரைப்படங்கள் மாடர்ன் தியேட்டரால் எடுக்கப்பட்ட காலத்தால் அழியாத காவியங்கள். நமது ‘ஜேம்ஸ்பாண்ட்’ ஜெய்சங்கர், மார்டன் தியேட்டரின் ஆஸ்தான நடிகராக இருந்த காலங்களும், முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு. கருணாநிதி மார்டன் தியேட்டரில் மாத சம்பளத்துக்கு கதை வசனம் எழுதியதும், கவிஞர் கண்ணதாசன் இங்கு மாத சம்பளத்துக்கு பாடல்கள் எழுதியதாகவும் இருக்கிறது வரலாறு.

டி.ஆர்.எஸ் நிறைவேறாத ஆசை!

மாடர்ன் தியேட்டர்ஸின் 99-வது படமான ‘கொஞ்சும் குமரி’ மனோரமாவை கதாநாயகியாக வைத்து தயாராகிக் கொண்டிருந்தது. இதன் தயாரிப்பு வேலைகள் நடந்து கொண்டிருக்கும் போதே டி.ஆர்.எஸ் ஆகஸ்ட் 29,1963 அன்று மாரடைப்பால் தன்னுடைய 56 ஆம் வயதில் காலமானார். சுந்தரம் காலமானார் என்று செய்தி வந்த போது மனோரமா ‘கொஞ்சும் குமரி’ படப்பிடிப்பில் இருந்தார். தகவலை அறிந்ததும் தன்னுடைய மேக்கப்பை கூட கலைக்காமல் அவருடைய வீட்டுக்குச் சென்று நேரில் அஞ்சலி செலுத்தினார்.

மொத்த படங்கள்!

1982 வரை மார்டன் தியேட்டர் சினிமா கம்பெனி மூலம் படங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன. படத்தயாரிப்பைக் கைவிடும் நிலையில், மாடர்ன் தியேட்டர்ஸ் மொத்தமாக 136 படங்களைத் தயாரித்திருந்தது. அதில் தமிழ் மொழிப்படங்கள் மட்டும் 102. அதுபோக, தெலுங்கு 13, கன்னடம் 4, மலையாளம் 8, சிங்களம் 7, இந்தி 1, ஆங்கிலம் 1 எனப் பல மொழிகளில் படங்களைத் தயாரித்திருந்தார்கள்.

 இவ்வாறு தமிழ்சினிமா உலகிற்கே கலங்கரை விளக்கமாக விளங்கிய ஒரு நிறுவனம் படத்தயாரிப்பையே நிறுத்திக் கொண்டது தமிழ் சினிமாவின் சோகமான வரலாறு. மாடர்ன் தியேட்டர்ஸின் வண்ணமிழந்த எதிர்காலத்திற்கு சாட்சியாக அதன் நுழைவு வாயில் மட்டும் சிதிலமடைந்து நின்று கொண்டிருக்கிறது.

Also Read – 4 ‘மில்லியன் டாலர்’ கேள்விகளுக்கு மணிரத்னத்தின்  நறுக் பதில்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top