கலைஞர், எம்.ஜி.ஆர்ல இருந்து ரஜினி வரைக்கும் ஒருத்தர்விடாமல் எல்லாத்தையும் வாயாலயே வம்பிழுத்த ஒருத்தர்னா அது பழனிபாபாதான். யார் இவரு? என்னலாம் பேசி வைச்சிருக்காரு?
“கலைஞரை கடுமையாகச் சாடிய ஒரு மேடைப்பேச்சு, எம்.ஜி.ஆரையும் கடுமையாகச் சாடிய இன்னொரு பேச்சு, ரஜினிகாந்த் மீது கடும் விமர்சனம் வைக்கும் இன்னொரு பேச்சு, இஸ்லாம் குறித்தும் இஸ்லாத்தில் இருக்கும் சில குறைகளைக் கண்டித்தும் சில பேச்சுகள், பிரபாகரனைப் புகழ்ந்து ஒரு பேச்சு… பாமகவைப் புகழ்ந்து பல பேச்சுகள்…” என ‘பழனி பாபா’வின் சில வீடியோக்கள் ஃபேஸ்புக் டைம்லைனில் வரிசைகட்டி வந்தது. நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசியல் மேடைகளை அதிரவைத்த குரலுக்கு சொந்தக்காாரரைப் பற்றி இந்த வீடியோவில் பார்ப்போம்.
பார்க்க கொஞ்சம் மணிவண்ணன் லுக், பேச்சுலயும் அவரோட கொங்கு ஸ்லாங். ஆனா, மேடைகளில் ஏறினால் ஆவேசமும் உற்சாகமுமாக உணர்ச்சிப்பிரவாகமாக அணல் தெறிக்க பேசுவதில் சீமானுக்கு முன்னோடி. சில சமயங்களில் அந்தக் கால சீமான் என்ற யோசனையும் வந்து போகும்படியான பல பேச்சுகளை நீங்கள் யூடியுபில் பார்க்கலாம். பழனி பாபாவைப் புகழ்ந்து பேசிய சீமானின் வீடியோவும் கூட உங்களுக்குக் கிடைக்கும். ஹெச்.ராஜா பழனிபாபாவைக் கிண்டலடித்துப் பேசிய வீடியோவும் கிடைக்கும்.
தமிழ் நாட்டின் மிக முக்கியமான ஓர் அரசியல் கட்சியின் பெயர் மாற்றத்துக்குப் பின்னால் தன்னுடைய பங்களிப்பு இருந்ததாக பழனி பாபா கூறியிருக்கிறார். அது என்ன கட்சியாக இருக்கும், என்ன பெயர் மாற்றப்பட்டிருக்கும்னு நீங்க கண்டுபிடிச்சிருந்தா கமெண்ட்ல சொல்லுங்க வீடியோவுடைய கடைசியில் அதுக்கான பதிலைப் பார்ப்போம்.
பெரியார் மீது பற்றும், அண்ணாவின் கருத்துகளால் கவரப்பட்டும் துவக்கக் காலங்களில் திமுக-வின் மேடைகளில் முழங்கிக்கொண்டிருந்தார் பழனி பாபா. கருணாநிதியின் தலைமை மீதும் கட்சியில் இஸ்லாமியர்களுக்கான பிரதிநிதித்துவம் மீதுமுள்ள தன் மனக்குறையுடன் திமுகவை விட்டு வெளியேறி, எம்ஜிஆரின் பக்கம் தன் சாய்வை வெளிப்படுத்தி அவருடன் தன்னை இணைத்துக்கொண்டார். எம்ஜிஆர் மீதான திமுகவின் கருத்து மோதல்களிலும் தாக்குதல்களிலிருந்தும் தடுத்து நிறுத்தும் ஓர் அரணாக பழனி பாபா முதலில் விளங்கி இருக்கிறார். எம்ஜிஆரின் மீதான அரசியல் தாக்குதல்களுக்குப் பதிலடி தந்ததைப் போலவே, திரைத்துறையில் அவருக்கு ஏற்பட்ட சிக்கல்களின் போதும் உடனிருந்ததாக இன்னொரு வீடியோவில் பழனிபாபாவே பேசி இருக்கிறார். ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தின் நெகடிவ்வை பிளாஷ் செய்துவிடுவார்கள், படம் வெளியிடப்படாமல் முடங்கிவிடும் என எம்ஜிஆர் யோசித்துக்கொண்டு பழனி பாபாவின் உதவியை நாடி இருக்கிறார். இங்கிருந்து ஹைதராபாத் சென்று, சென்னாரெட்டி உதவியுடனும் சஞ்சய் காந்தி உதவியுடனும் மும்பையில் ஒரு லேபில் அந்தப் படத்தின் நெகடிவை டெவலப் செய்துகொண்டு வந்து அந்தப் படத்தை வெளியிட்டதாகவும் சொல்லியிருக்கிறார்.
இப்படி பல விதங்களிலும் எம்ஜிஆருடன் நெருக்கமாக இருந்தவர் மீது “பழனி பாபா, சென்னை புனித ஜார்ஜ் கோட்டைக்குள் பழனி பாபா காலடி எடுத்து வைக்கக்கூடாது” என அவருடைய ஆட்சிக் காலத்தில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது. இன்னொரு வீடியோவில் நான் இந்த எம்.ஜி.ஆருக்கு நான் எவ்வளவு உதவி செய்திருக்கேன், அதெல்லாம் நெனச்சிப் பாக்காம, என் மேல எத்தனை வழக்கு, எத்தனை கைது என ஆதங்கப்பட்டிருக்கிறார். அவரை விட்டு விலகிய பிறகு “எம்.ஜி.ஆரை விட நான் பெரிய வள்ளல், அவரை விட அதிகமா நான் தான் உதவிகள் செய்திருக்கேன்” என பலவாறாக அவரைத் தாக்கி பேசி இருக்கிறார். நெருக்கமாக இருந்தவர்கள் விலகக் காரணம் என்ன? சென்னையில் இந்து முன்னணியின் துவக்கவிழா நடைபெற்ற சமயத்தில் “இஸ்லாமியர்களுக்கு முஸ்லீம் லீக் இருப்பது போல இந்துக்களுக்கு இந்து முன்னணி ஏன் இருக்கக்கூடாது?” என எம்.ஜி.ஆர் பேசியதாகவும் அதில் கடுப்பான பழனி பாபா எம்.ஜி.ஆரை விட்டு விலகி இருக்கிறார். அதன் பிறகு தன்னுடைய இறுதிக்காலம் வரைக்கும் பாட்டாளி மக்கள் கட்சியுடன் நெருக்கமாகவும் அவர்களுடைய மேடைகளில் அணல் தெறிக்க அரசியல் பேசி இருக்கிறார் பழனி பாபா.
திமுக வில் இருந்த போதும் சரி, எம்.ஜி.ஆருடன் இருந்த போதும் சரி அந்த மேடைகளிலும் இஸ்லாமியர்களின் நலன், இஸ்லாமியர் பிரதிநிதித்துவம் குறித்தும் பல பேச்சுகளைப் பேசி இருக்கிறார். தமிழக அரசியல் களத்தில் ‘காயிதே மில்லத்’ அவர்களுக்குப் பிறகு இஸ்லாமிய மக்களின் நலனுக்காக ஒலித்த குரலாகவே இருந்திருக்கிறார் பழனி பாபா. அதே சமயம் இஸ்லாமியர்களிடையே இருந்த வரதட்சனை முறை, வட்டிக்குக் கொடுப்பது, வாங்குவது போன்ற வழக்கங்களைக் கடுமையாகச் சாடி இருக்கிறார். இவை போக சந்தன கூடு, தர்கா வழிபாடு போன்றவற்றின் மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்ததன் காரணமாகவே இஸ்லாமிய சமூகத்தினரிடையேவும் ஒரு பிரிவினரால் கடும் எதிர்ப்புக்கு ஆளாகி இருக்கிறார். இஸ்லாம் குறித்து இவர் புத்தகங்கள் எழுதியது போக, பிற மார்க்க அறிஞர்களையும் இஸ்லாம் குறித்து புத்தகங்களை எழுத உதவியும் உத்வேகமும் ஊட்டி இருக்கிறார். ஒருபக்கம் இந்து முஸ்லிம் ஒற்றுமைக்காகவும் நல்லுறவு பேணவும் பல அமைப்புகளை ஒன்று திரட்டி இருக்கிறார்.
ராமகோபாலனுடைய கருத்துகளுக்கு மறுப்பு தெரிவித்து எழுதிய புத்தகத்திற்காக பழனி பாபா கைது செய்யப்பட்டிருக்கிறார். கிறித்துவப் பாதிரியார்களுடன் விவாதம் நடத்தியிருக்கிறார், பல ஆய்வுகளை மேற்கொண்டு இருக்கிறார். இன்னொரு புறம் பேராசியர் கல்யாணி, பேராசிரியர் அ.மார்க்ஸ் போன்ற சமூக உரிமைப் போராளிகளுடன் தோளூடன் தோளாக நின்றிருக்கிறார். அப்போதைய குடியரசுத்தலைவர் ஆர்.வெங்கட்ராமனுக்கு எதிராக திருப்பதி தரிசணம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுத்திருக்கிறார். எக்கச்சக்கமான வழக்குகள் இவர் மீது பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. பல முறை கைது செய்யப்பட்டிருக்கிறார். தடாலடியான அடாவடி அரசியல் பேச்சுகளைத் தாண்டி, உளமாற மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் குரலுக்குச் சொந்தக்காரராக இருந்திருக்கிறார் பழனி பாபா.
Also Read – அனல் பேச்சு டு அமைதியோ அமைதி – என்ன ஆனது நாஞ்சில் சம்பத்துக்கு?
பழனிக்கு அருகில் உள்ள புது ஆயக்குடி என்னும் ஊரில் “அஹமது அலி”யாகப் பிறந்தவர், குன்னூரில் உள்ள செயிண்ட் ஜோஸப் கான்வென்ட்டில் பள்ளிப்படிப்பும், பழனியில் கல்லூரிப் படிப்பும் தொடர்கிறார். படிக்கிற காலத்திலேயே துணிச்சலான பேச்சு, அரசியல் ஈடுபாடும் கொண்டிருப்பதால், தனிப்பட்ட இல்லற வாழ்வு தனக்கு ஒத்துவராது என்று இல்லற வாழ்வையே அமைத்துக்கொள்ளவில்லை. அவருடைய ஆரவாரமான ஆக்ரோஷமான பேச்சுகள் பல மட்டங்களிலும் அவருக்கு எதிரிகளை சம்பாதித்து கொடுத்தது. தன்னுடைய நண்பரைச் சந்தித்துவிட்டு வெளியே வந்த போது 6 பேர் கொண்ட கும்பலால் அவர் வெட்டிசாய்க்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமாக இருந்த கட்சியின் பெயரை, ‘அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமாக’ மாற்றியதன் பின்னணியில் பழனி பாபா தான் ஆலோசனை வழங்கியதாக ஒரு பேச்சில் பேசி இருக்கிறார்.