கோலிவுட் படங்கள்

பெரிய ஹீரோ.. ரிசல்ட் ஜீரோ..! #WorstTamilMovies2023

இந்த வருஷம் ரஜினி, விஜய், அஜித், தனுஷ், விஷால், எஸ்.கே வரிசையில உதயநிதி, சித்தார்த், அசோக் செல்வன்னு எல்லோரும் மாஸ்காட்டியிருக்காங்க. ஆனா ரொம்ப எதிர்பார்த்த படங்கள்லாம் நம்மை ரொம்பவே சோதிச்சிருக்கு. சேச்சே இருக்காதுனு நெகட்டீவ் ரிவ்யூஸைலாம் கடந்துபோய் படம் பார்த்து பாடம் கத்துக்கிட்டதுதான் மிச்சம். அப்படி 2023-ல தியேட்டருக்குள்ள வைச்சு அடி வெளுத்துவிட்ட படங்களைத்தான் பார்க்கப்போறோம்.

ஜப்பான்

தீபாவளிக்கு கார்த்திண்ணா படம் வந்தாலே சக்ஸஸ்தான்னு இருந்த ஹிஸ்டரியையே மாத்தின படம், ஜப்பான். அமீரோட சாபமோ என்னமோனு தெரியலை படம் பெரிசா கை கொடுக்கலை. நான் சொன்னது படக்குழுவுக்கு இல்ல, ஆடியன்ஸ்க்கு… படம் பர்ஸ்ட் ஹாஃப் இல்ல, முதல் அரைமணிநேரத்தை தாண்டும்போதே தலைவலி வந்துடுது. அதுலயும் கார்த்தி பல்லைக் கடிச்சுட்டு பேசுற மாடுலேசனுக்கெல்லாம் ரெண்டு ஜெண்டூபாம் கொண்டு போகணும்போல.. இந்த வருஷத்தோட மிகப்பெரிய டிஸாஸ்டர்ல முதல் இடம் ஜப்பானுக்குத்தான். இந்த கதையை செலக்ட் பண்ணி வாண்டட்டா நடிச்சிருக்கார் கார்த்தி. இதுக்குப் பெயர்தான் ஆப்பை தேடிப்போய் உட்கார்றதுபோல…

சந்திரமுகி 2, ருத்ரன்!

சந்திரமுகினு ஒரு இன்டஸ்ட்ரி ஹிட் கொடுத்து நடிகர் ரஜினியை எழ வைச்ச படம். லேடி சூப்பர் ஸ்டாரா நயன்தாராவை உயர்த்தின படம். இப்படி பல சிறப்புகளை சொல்லிட்டே போகலாம். அப்படி இருந்த ஒரு மாஸ்டர் பீஸை, தெருவுக்கு கொண்டுவந்து விட்ட படம்தான் சந்திரமுகி 2. சந்திரமுகி எனும் ப்ராண்டை அவரோட சிஷ்யன் லாரன்ஸே உடைச்சதுதான் உச்சகட்ட சோகம். சரியான சி.ஜி இல்ல, சரியான ஆர்டிஸ்ட் செலக்‌ஷன் இல்ல, சரியான கதைக்களமும் இல்ல.. சரியான கதையே இல்ல, இதுல மத்ததையெல்லாம் எதிர்பார்க்குறது நம்ம தப்புதான். ஆனாலும் பட ரிலீஸ் ஒத்திவைச்சதுக்கு ஃபுட்டேஜை கணோம்னு சொன்னாங்க. அது அப்படியே காணாம போயிருக்கலாம்ங்குறதுதான் நம்மளோட மைண்ட்வாய்ஸா இருந்துச்சு.

யாதும் ஊரே யாவரும் கேளிர்

வருஷத்துக்கு ஒரு டிஸாஸ்டர் கொடுத்தே தீருவேன்னு முடிவு பண்ணி இறங்கியிருக்கார் அண்ணன் வி.ஜே எஸ். கேமியோ, வில்லன்னு நடிச்சா கூட்ட ஹிட் ஆகுது. விடுதலை, ஜவான்னு ரெண்டு படங்கள் ஆறுதல் கொடுத்தா, மைக்கேல், யாதும் ஊரே யாவரும் கேளீர்னு ரெண்டு டிஸாஸ்டர்லயும் இறங்கி வெளுக்கிறார். நல்ல கதைகளை செலக்ட் பண்ணி நடிச்சார்ங்குற பெயரெடுத்தவர்னு நினைக்கிறப்போ, மனசுக்கு கஷ்டமாயிருக்கு.

அன்னபூரணி

லேடி சூப்பர் ஸ்டார் ஜவான்னு ஒரு ஹிட் படத்துல நடிச்சாலும், இறைவன், அன்னபூரணினு ரெண்டு ப்ளாக்பஸ்டர் தோல்விகளை கொடுத்து கோடிகளை அள்ளியிருக்காங்க. இதுல 10 கோடி ரூபாய் சம்பளம் வாங்குன அண்ணப்பூரணி படத்துக்கு ஒரு கோடி கூட ஷேர் வரலைங்குறதுதான் சோகம். படமும் பார்க்கிற மாதிரி இல்ல. இவங்களுக்கு சொல்லிக்கிறது ஒன்னுதான். நீங்க நயன்தாரா, லேடி சூப்பர் ஸ்டார்ங்குறதை மனசுல வைச்சுக்கிட்டு அடுத்த படத்தை கொடுங்க.

kick

10 வருஷம் ஜெயில்ல இருந்து உலகத்தை வெறுத்துபோன மனநிலைக்கு வரணும்னா இந்தப் படத்தைப் பார்க்கலாம். தில்லுக்கு துட்டுனு ஒரு ஹிட்டைக் கொடுத்துட்டு, அடுத்ததா கிக்னு ஒரு அரைவேக்காட்டு சமமையலை படைச்சார், சந்தானம். அதுல காமெடி பண்றோம், நீங்க சிரிச்சே ஆகணும்னு கழுத்துல கத்தி வைக்காத குறையா கடிச்சு விட்டிருந்தாங்க. சந்தானம் சார், நீங்க படமே நடிக்கலைன்னாலும் பரவாயில்லை, இந்த மாதிரி படத்தை செலக்ட் பண்ணாதீங்க.. ப்ளீஸ்.

அகிலன், இறைவன்

sea traffic பத்தி ஒரு டயலாக் இருந்தது கொஞ்சம் நம்பிக்கையளிக்க உள்ள போனதுதான் மிச்சம். சண்டைக் காட்சிகளுக்கு பக்கத்துல சீட்ல இருந்த குழந்தையே சிரிக்கிற அளவுக்கு படு மொக்கையான படம். பர்ஸ்ட் ஹாஃப் ஒரு படத்தையும், செகண்ட் ஆஃப் இன்னொரு படத்தையும பார்த்த மாதிரி இருந்தது. அப்பாவோட களங்கத்தை துடைக்கிற மகனான வில்லு படத்தோட இன்னொரு வெர்சன்தான் இந்த அகிலன். இறைவன் பத்தி சொல்லாமலே விட்ரலாம் போல. ஆனா நயன்தாரா கழுத்துல ஒட்டி வைச்சிருந்த டேப்பை மட்டும் மன்னிக்கவே மாட்டேன் ப்ரோனு சொல்ற அளவுக்கு படத்தோட கன்டென்ட் இருந்தது. அதான் கணக்குக்கு பொன்னியின் செல்வன் கொடுத்தேன்னு ஜெயம் ரவி சும்மாவே இருந்திருக்கலாம்.

எல்.ஜி.எம்!

தல தோனி சினிமாவுக்கு வந்து முதல் முதலா தயாரிச்சப்படம் இந்த எல்.ஜி.எம். ஹரீஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபுனு நட்சத்திரப்பட்டாளம் இருந்தாங்க. சென்னை இஸ் மை செகண்ட் ஹோம்னு சொன்னது மட்டும் இல்லாம, தன்னோட சினிமா தயாரிப்பையும் தமிழ்நாட்ல துவக்கினார் தோனி. ஆனா தோனியே இனி சி.எஸ்.கேவுக்கே வரமாட்டேன்னு சொல்ற அளவுக்கு இருந்தது படத்தோட ரிசல்ட். இந்தப்படத்தோட ஒரே ஆறுதல் நதியாவை திரும்ப ஸ்கிரீன்ல பார்த்ததுதான். நன்றிகள் தோனி சாப்.

காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்!

எதுக்கெடுத்தாலும் வேட்டியை அவுத்து தூக்கிப் போட்டுட்டு சண்டை போடுற கதாநாயகன், கதாநாயகனுக்காக எந்த எல்லைக்கும் போற கதாநாயகி, அரிவாளும், கம்புமா அடியாட்கள்…. அய்யோ முடியலடா சாமினு சொல்ற அளவுக்கு படம் தரமா இருந்தது. முத்தையா எனும் இந்த சுவர் இன்னும் எத்தனை பேரை காவு வாங்க போகுதுன்னு தெரியலை.

பஹீரா

டைட்டிலை பார்த்தே உஷாராகியிருக்கணும். ஆனா ரெட்ரோ சாங்ல பிரபுதேவாவோட டான்ஸ் பட்டையைக் கிளப்பி எதிர்பார்ப்பு வந்துச்சு. அதோட தியேட்டருக்குப் போனா, அந்த சீனே கடைசியிலதான் வைச்சிருக்கேன், April Fool-னு வெளிய அனுப்பினார் ஆதிக் ரவிச்சந்திரன். பஹீராவை நினைச்சாலே மனசெல்லாம் பதறுது. பிரபுதேவா நீங்க நல்ல நடிகர்னு அவருக்கு யாராவது அப்பப்போ சொல்லணும்போல. அதுக்கு பரிகாரமாத்தான் மார்க் ஆண்டனி கொடுத்தார்னு ஆறுதலைடையுறதை தவிர வேற வழியில்லை.

தமிழரசன், கொலை, ரத்தம்!

பிச்சைக்காரன் 2 கொடுத்த வெற்றியால முந்தைய படங்களான தமிழரசன், கொலை, ரத்தம்னு ரிலீஸ் பண்ணார், விஜய் ஆண்டனி. இது எல்லாமே ப்யூர்லி ஆடியன்ஸை அட்டாக் பண்ண சம்பவங்களாத்தான் பார்க்க முடியுது. விஜய் ஆண்டனியும் நல்ல படங்கள்தான் தருவார்னு நம்பி போற அடியன்ஸ்க்கு காத்திருந்தது என்னமோ, சோகமும், வலியும்தான். அடுத்த வருஷம் ஹிட்லர், காக்கினு படங்கல் லைனப்ல இருக்கு. இது என்னவெல்லாம் பண்ணப்போகுதுனு பொறுத்திருந்துதான் பார்க்கணும்.

இந்த லிஸ்ட்ல வீரன், தலைநகரம் 2னு நிறைய படங்கள் கைவசம் இருக்கு. இதுல மிஸ் ஆன படங்களை கமெண்ட்ல சொல்லுங்க.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top