பிரதமர் மோடி முதல் பிரியங்கா காந்தி வரை… பட்ஜெட் பற்றிய பிரபலங்களின் கருத்துகள்!

ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அரசின் 2022-23 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்திருக்கிறார். சுமார் ஒரு மணி நேரம் 32 நிமிடங்கள் பட்ஜெட் உரையை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வாசித்தார். `தனிநபர் வருமான வரி உச்ச வரம்பில் மாற்றம் எதுவுமில்லை, ஒரு வகுப்பு ஒரு கல்வி சேனல் என்கிற வகையில் தற்போதுள்ள 7 சேனல்களின் எண்ணிக்கை 200 ஆக உயர்த்தப்படும், பிரதமரின் கதி சக்தித் திட்டம் தொடக்கம், குடிநீர் வசதியை மேம்படுத்த ரூ.60,000 கோடி ஒதுக்கீடு, டிஜிட்டல் பல்கலைக்கழகங்கள் ஏற்படுத்தப்படும், இ-பாஸ்போர்ட் அறிமுகப்படுத்தப்படும், 5ஜி சேவை 2023-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்படும், 2025-க்குள் அனைத்து கிராமங்களும் இணைய வசதி, டிஜிட்டல் கரன்சி அறிமுகம்’ போன்ற அம்சங்கள் உள்ளன.

பட்ஜெட் 2022
பட்ஜெட் 2022

கூடுதலாக, `மாநிலங்களின் வளர்ச்சித் திட்டங்களுக்காக வட்டியில்லா கடன் வழங்க ஒரு லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு, குடைகளுக்கான வரி 20% ஆக உயர்த்தப்படுகிறது, வைரங்கள், ரத்தினங்களுக்கான சுங்க வரி 5% ஆகக் குறைக்கப்படுகிறது, செல்போன்கள் உள்ளிட்ட மின்னணுப் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கான இறக்குமதித் தீர்வை 7.5% ஆகக் குறைப்பு, 400 வந்தே பாரத் ரயில்கள் இயக்க முடிவு’ போன்ற அம்சங்களும் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றிருந்தது. வழக்கத்துக்கு மாறாக, நிதிநிலை அறிக்கை வெளியாகிறது என்பதற்கான எந்தவித பரபரப்பும் இன்றி அமைதியாக இந்த சம்பவம் நடந்து முடிந்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஒன்றிய அரசின் பட்ஜெட்டுக்கு ஆதரவாகவும் எதிராகவும் சமூக வலைதளங்களில் பலர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அவ்வகையில், பட்ஜெட் குறித்து முக்கிய தலைவர் என்னவெல்லாம் கூறியுள்ளனர் என்பதை இங்கு பார்க்கலாம்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி பா.ஜ.க தொண்டர்களிடம் காணொளி மூலம் உரையாடும்போது பட்ஜெட்டைக் குறிப்பிட்டு பேசினார். அதில், “நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சிறப்பான பட்ஜெட்டை தந்துள்ளார். பட்ஜெட்டில் அடங்கியுள்ள சிறப்பம்சங்கள் குறித்து பா.ஜ.க தொண்டர்களாகிய உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன். ஒன்றிய அரசின் பட்ஜெட் பல தரப்பிலும் பாராட்டைப் பெற்று வருகிறது. ஒன்றிய அரசின் தொலைநோக்கு பார்வையை விரிவுபடுத்தும் இலக்கு கொண்டதாகவும் இந்த பட்ஜெட் அமைந்துள்ளது. இந்த பட்ஜெட் அனைத்து தரப்பு மக்களுக்கும் வளர்ச்சியைக் கொண்டு சேர்க்கும். இந்த பட்ஜெட் ஏழைகளுக்கு அதிகாரம் அளிக்கும். இந்த பட்ஜெட் நாட்டை புதிய உச்சத்துக்கு அழைத்துச் செல்லும். இதன் மூலம் இந்தியா சுயசார்படைந்த நாடாக மாற வேண்டும். நவீன இந்தியாவிற்கு சுயசார்பு கட்டாயம் தேவை” என்று பேசினார்.

 ராகுல் காந்தி
ராகுல் காந்தி

காங்கிரஸைச் சேர்ந்த ராகுல் காந்தி பட்ஜெட் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், நடுத்தர மக்கள், ஏழைகள் உட்பட சாதாரண மக்களுக்கு பட்ஜெட்டில் ஒன்றுமே இல்லை. சமூகத்தில் அடித்தட்டு மக்கள், இளைஞர்கள், மற்றும் விவசாயிகளின் முன்னேற்றத்துக்கு என பட்ஜெட்டில் எதுவும் கூறப்படவில்லை. பிரதமர் மோடி அரசின் இந்த பட்ஜெட், பூஜ்ஜிய பட்ஜெட்” என விமர்சித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்,அனைத்துத் துறைகளின் வளர்ச்சியையும் கவனத்தில்கொண்டு நிதிநிலை அறிக்கை வகுக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்தி, பட்ஜெட்டில் என்ன கூறப்பட்டுள்ளது என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். எதையும் யோசிக்காமல் வெறுமனே கருத்துகளை மட்டும் கூறும் தலைவரைக் கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சிக்காக பரிதாபப்படுகிறேன். எங்களைப் பார்த்து அவர் கூறும் கருத்துகளை அவர்கள் ஆளும் மாநிலங்களில் நடைமுறைப்படுத்த வேண்டும். அவர் கூறியிருப்பது பொறுப்பற்ற விமர்சனம்” என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.

Also Read: முப்பது வயதுக்குள் நீங்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய மூன்று நிதிப் பழக்கங்கள்!

 மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, வேலையின்மை, விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்கத்தால் மக்கள் நசுக்கப்படுகின்றனர். இந்நிலையில், சாதாரண பொது மக்களுக்கு என்று பட்ஜெட்டில் ஒன்றுமே இல்லை. வெறும் வார்த்தை ஜாலங்களால் மட்டுமே இந்த பட்ஜெட் நிரப்பப்பட்டுள்ளது. இது பெகாசஸ் ஸ்பின் பட்ஜெட்” என்று தெரிவித்துள்ளார். அதேபோல காங்கிரஸ் எம்.பி.சசிதரூர் இந்த பட்ஜெட் பற்றி,பட்ஜெட்டில் சொல்லிக்கொள்ளும்படி எதுவுமே இல்லை. இந்த பட்ஜெட் மிகவும் ஏமாற்றம் அளிக்கும் வகையில் உள்ளது. பயங்கரமான பணவீக்கத்தை எதிர்கொள்ளும் இந்த வேளையில் நடுத்தர மக்களுக்கு எந்தவித வரிவிலக்கும் அளிக்கப்படவில்லை. இந்தியாவுக்கு நல்ல நாள்கள் வர இன்னும் 25 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

 யோகி ஆதித்யநாத்
யோகி ஆதித்யநாத்

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மிகவும் முற்போக்கான பட்ஜெட் இது. அனைத்துப்பிரிவு மக்களும் இந்த பட்ஜெட்டால் பலனடைவார்கள். குறிப்பாக விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள் பயன்பெறுவார்கள்” என்று பட்ஜெட் குறித்த தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம்,வரிச்சலுகை குறித்த எந்தவித அறிவிப்பும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்படவில்லை. இந்தியாவில் ஏழை மக்களும் இருக்கிறார்கள் என்பதை நிதியமைச்சர் இப்போதுதான் நினைத்து பார்த்துள்ளார். ஏழைகள் என்ற வார்த்தை பட்ஜெட்டில் இரண்டு முறை இடம்பெற்றுள்ளது. ஏழைகளை மறக்காததற்கு நன்றி. ஆனால், ஏழை மற்றும் நடுத்தர மக்களின் நலனுக்காக அறிவிக்கப்பட்ட அனைத்து மானியங்களும் குறைக்கப்பட்டுள்ளன. முதலாளிகளுக்கு சாதகமான இந்த பட்ஜெட்டை மக்கள் புறக்கணிப்பார்கள்” என்று தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

 மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பட்ஜெட் தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், “ஒன்றிய நிதியமைச்சரின் நிதிநிலை அறிக்கை தமிழக மக்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. தமிழ்நாடு அரசின் சார்பில் ஒன்றிய அரசிடம் கோரிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு இல்லை. ஒரே நாடு, ஒரே பத்திரப்பதிவு என மாநில அரசு உரிமைகளில் தலையிடும் திட்டத்தை நிதியமைச்சர் அறிவித்திருக்கிறார். அடித்தட்டு மக்களின் கையில் ஒரு பைசா கூட இருக்க கூடாது என்பதுதான் மத்திய அரசின் எண்ணமா? இதனை ‘மக்கள் நலனை மறந்த நிதிநிலை அறிக்கை’ என அடைமொழியிட்டு அழைப்பதே பொருத்தமானதாக இருக்கும். வார்த்தை அலங்காரங்கள் நிறைந்த ஒன்றிய பாஜக அரசின் வழக்கமான நிதிநிலை அறிக்கையாகவே இது உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

 டிடிவி தினகரன்
டிடிவி தினகரன்

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், மத்திய பட்ஜெட்டில் உள்கட்டமைப்பு,நீர்ப்பாசனம்,சிறு-குறு தொழிலுக்கு உதவி,விவசாயத்திற்கான குறைந்தபட்ச ஆதார விலைக்கு நிதி உள்ளிட்டவை மகிழ்ச்சியளித்தாலும் LIC பங்கு விற்பனை,நீர்பாசனத்திட்டங்களில் தனியார்மயம், தனிநபர் வருமானவரி வரம்பில் மாற்றமில்லாதது ஆகியவை கவலையளிக்கின்றன” என்றும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி,மொத்தத்தில், மத்திய அரசின் 2022-23 ம் ஆண்டுக்கான இந்த பட்ஜெட் நதிநீர் இணைப்பு, விவசாயத் துறைக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்கான நிதி ஒதுக்கீடு, மக்களுக்கு வீடு வழங்கும் திட்டம், வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு, நெடுஞ்சாலைத் துறை, 5 ஜி சேவை, 60 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் என்றும் நம் நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும் வகையில் அமைந்துள்ளது. அதிமுக சார்பில் பாரதப் பிரதமர், சிறப்பான முறையில் பட்ஜெட்டை வழங்கிய நிதியமைச்சருக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

பிரியங்கா காந்தி
பிரியங்கா காந்தி

உத்தரகாண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி டேராடூனில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் ஏழை, நடுத்தர மக்களுக்கு என்ன உள்ளது? வைரத்தின் விலை குறைந்துள்ளதாகவும் மருந்துகளின் விலை உயர்ந்துள்ளதாகவும் இன்று காலை ஒருவர் என்னிடம் கூறினார். நான் மத்திய அரசைக் கேட்க விரும்புகிறேன்... நீங்கள் எப்போது கண்களைத் திறப்பீர்கள்?” என்றார். அதேபோல நடிகரும் ம.நீ.ம தலைவருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில்,மக்களின் வாழ்வில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாத பட்ஜெட் இது. பொருளாதார நசிவால் வாழ்வாதாரத்தை இழந்த ஏழை மக்களுக்கான திட்டங்கள், வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றம், சிறுகுறு நடுத்தர தொழில்கள் மேம்பட உதவி என எதிர்பார்த்த அம்சங்கள் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது” என்று தெரிவித்தார்.

மத்திய அரசின் இந்த பட்ஜெட் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்கனு மறக்காமல் கமெண்ட் பண்ணுங்க!

Also Read: மத்திய பட்ஜெட் 2022: டிஜிட்டல் சொத்துகளுக்கு 30% வரி; வருமான வரி உச்சவரம்பில் மாற்றமில்லை – முக்கிய அம்சங்கள்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top