ஆ.ராசா-வின் 55 கோடி ரூபாய் சொத்து முடக்கம்.. என்ன நடந்தது!

தி.மு.க துணைப் பொதுச்செயலாளர்களில் ஒருவரான ஆ.ராசா, முன்னாள் மத்திய அமைச்சர், நீலகிரி தொகுதி எம்.பி என இத்தனை முக்கியமான பொறுப்புகளில் இருக்கும் ஆ.ராசாவுக்குச் சொந்தமான 55 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டிருப்பதாக அமலாக்கத்துறை அறிவித்திருக்கிறது. இந்த சொத்து என்பது அசையும் சொத்தல்ல; ஒரு நிலம்… கிட்டத்தட்ட 45 ஏக்கர் பரப்பளவிலான நிலம். அந்த சொத்தை முடக்கியிருக்கிறது அமலாக்கத்துறை. இதற்குப் பின்னணி என்ன?

A Raja
A Raja

ஆ.ராசா சொத்து

ஆ.ராசா, 1999 – 2010 இடைப்பட்ட காலகட்டத்தில் தன்னுடைய வருமானத்துக்கு அதிகமாக 575% சொத்துகள் சேர்த்திருப்பதாக, அதாவது அவருடைய வருமானத்தை விட 25 கோடி ரூபாய் அதிகமாக சொத்து சேர்த்ததாகப் புகார் எழுந்தது. இதுதொடர்பாகக் கடந்த 2015-ல் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதுகுறித்து அமலாக்கத்துறை சார்பிலும் வழக்கு ஒன்று தொடரப்பட்டு அது தொடர்ந்து நடைபெற்று வந்தது. அந்த விசாரணையில் ஆ.ராசா, கிருஷ்ணமூர்த்தி, விஜய் சரங்கன், ரமேஷ் உள்ளிட்ட 16 பேர் சேர்க்கப்பட்டிருந்தனர். அவர்கள் அனைவரும் வரும் 2023 ஜனவரி 10-ம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டிருக்கிறது. அதேபோல், ஆ.ராசாவின் சகோதரர்கள், நண்பர்கள் தொடங்கிய இரண்டு ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் நிர்வாகிகளும் ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், சொத்துகளை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்திருக்கிறது. ஏன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதுனு பார்த்தீங்கன்னா…. ஆ.ராசா, 2004 காலகட்டத்தில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராவதற்கு முன்பு வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்தார். பின்னர்தான் அந்தத் துறை ஜெய்ராம் ரமேஷூக்கு ஒதுக்கப்பட்டது. அவர் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்தபோது ஹரியானா மாநிலம் குர்கிராமில் ஒரு மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு சுற்றுச்சூழல் துறை கிளியரன்ஸ் கொடுத்திருந்தது. அதற்குக் கையூட்டாக அந்த ரியல் எஸ்டேட் நிறுவனம் கொடுத்த தொகையைக் கொண்டுதான் கோயம்புத்தூரில் இருக்கும் 45 ஏக்கர் நிலத்தை வாங்கியதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியிருக்கிறது. ஆ.ராசாவின் உறவினர்கள், நண்பர்கள் நடத்தும் நிறுவனம் மூலம் அந்த நிலம் வாங்கப்பட்டிருக்கிறது. அதைத் தவிர வேறு எந்த பணபரிமாற்றமோ அல்லது நிலத்தை விற்கவோ கூட இல்லை. அந்த ஒரு டிரான்சாக்‌ஷன் மட்டுமே நடந்திருக்கிறது. இதனால், சொத்துகள் வாங்குவதற்காக மட்டுமே பினாமி பெயரில் அந்த நிறுவனம் போலியாகத் தொடங்கப்பட்டதாகவும், அந்த நிறுவனத்தின் பெயரிலேயே இந்த 45 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டதாகவும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டியிருக்கிறது.

A Raja
A Raja

இது தி.மு.கவுக்கு, ஆ.ராசாவுக்கு பின்னடைவா என்று பார்த்தால், ஒரு சின்ன சறுக்கல்தான். நீதிமன்ற விசாரணையின்போது ஆ.ராசா தரப்பில், இந்த நிறுவனத்துக்கும் எனக்கும் எந்தவொரு சம்மந்தமும் இல்லை. என்னுடைய நண்பர்கள், உறவினர்கள் தனியாகத் தொடங்கிய நிறுவனம் அது. அவர்கள் தனியாகத் தங்கள் வருமானத்துக்கு வரி கட்டி வருகிறார்கள். அவர்கள் வாங்கிய அந்த சொத்துக்கும் எனக்கும் தொடர்பில்லை என்று வாதாடப்படும். இப்படியாக வழக்கின் விசாரணை நீளும். ஆனால், வழக்கு முடியும்வரை இந்தக் குற்றச்சாட்டு இருக்கும். அது ஆ.ராசாவின் பெயருக்கும் திமுகவுக்கும் சின்ன பின்னடைவாகவே இருக்கும். ஒவ்வொரு முறை வழக்கு விசாரணைக்கு வரும்போதும், பத்திரிகைகளில் இதுபற்றிய செய்தி வரும்போதும் ஒரு நெருடலாகவே இது இருக்கும். வழக்கின் விசாரணை பற்றி உள்ளுக்குள் நடக்கும் விஷயங்கள் விரிவாக வெளிவராது.

Also Read – ‘வீடியோ விவகாரத்துல எதுவும் உதவி வேணுமா!?’ – காயத்ரி ரகுராம் சபரீசன் சந்திப்பில் நடந்தது என்ன?

அ.தி.மு.கவுக்குத் தலைமையேற்பது யார் என்று ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் இடையே பிரச்னை நடந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாடு பி.ஜே.பியில் அண்ணாமலையில் வாட்ச் விவகாரமும், காயத்ரி ரகுராம் விவகாரமும் பற்றியெரிந்து கொண்டிருக்கிறது. தி.மு.கவில் உதயநிதிக்கு பதவி கொடுத்தது தொடர்பாக வாரிசு அரசியல் பிரச்னையும் புகைந்து கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் ஆ.ராசா விவகாரம் பற்றி தகவல் வெளியாகியிருக்கிறது. இது 2015-ம் ஆண்டு முதலே நடக்கும் சட்டரீதியான வழக்கு என்றாலும், தி.மு.கவுக்கும் ஆ.ராசாவுக்கும் இது ஒரு பின்னடைவாகவே பார்க்கப்படும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top