கர்ஜனை மொழி… கனிமொழி – 5 தரமான சம்பவங்கள்!

சமீபத்தில் நடந்த தி.மு.க பொதுக்குழுவில் அந்தக் கட்சியின் தூத்துக்குடி எம்.பியான கனிமொழி துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். இதை அறிவித்து அவரை மேடைக்கு அழைத்த தி.மு.க தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், `கர்ஜனை மொழி… கனிமொழி அவர்களையும் மேடைக்கு அழைக்கிறோம்’ என்று கூறி விளித்தார். 2015-ம் ஆண்டு முதல் தி.மு.க மகளிரணிச் செயலாளராக இருந்த கனிமொழி, கட்சியின் குரலாகவும் தமிழகத்தின் குரலாகவும் நாடாளுமன்ற மாநிலங்களவை, மக்களவையில் கர்ஜித்துக் கொண்டிருக்கிறார்.

கர்ஜனை மொழி கனிமொழி அரசியல், தனிப்பட்ட வாழ்வில் நடந்த 5 சம்பவங்கள் பற்றிதான் நாம் இந்த வீடியோவில் பார்க்கப்போறோம்.

சம்பவம் 1

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அவர்கள் அவையில் ஆற்றும் முதல் உரை எப்போதும் மனதுக்கு நெருக்கமானதாக இருக்கும். அப்படி, 2007-ல் முதல்முறையாக மாநிலங்களவை உறுப்பினராகப் பொறுப்பேற்ற பிறகு, இந்தியா – அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தத்தைப் பற்றிய விவாதத்தில் கலந்துகொண்டு முதல் உரையை ஆற்றினார். சுமார் 10 நிமிடங்கள் நீடித்த அந்த உரை அவையில் இருந்த முதுபெரும் அரசியல்வாதிகளையே உலுக்கியது. கனிமொழி பேசி முடித்ததும், நேரடியாக அவரது இருக்கைக்கே சென்று பாராட்டினார் கபில் சிபல். `உங்களுடைய அறிவார்ந்த பேச்சுக்கு வாழ்த்துகள்’ என்று துண்டுச் சீட்டில் எழுதி கனிமொழியிடம் கொடுக்கச் செய்து அவரைப் பாராட்டியிருக்கிறார் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்.

Kanimozhi
Kanimozhi

சம்பவம் 2

2000-ல் கருணாநிதி கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழக அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத சம்பவம். ஜூன் 30-ம் தேதி அவரைக் கைது செய்தது அப்போதைய அ.தி.மு.க அரசு. பதினைந்து நாட்கள் நீதிமன்றக் காவல் அளித்த நீதிமன்றம், அவரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல உத்தரவிட்டது. ஆனால், அவரை சென்னை மத்திய சிறைச்சாலைக்குக் கொண்டு சென்றது போலீஸ். அப்போது, இதய பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த தனது தந்தையை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லாதது மிகப்பெரிய அநீதி என்று போலீஸ்காரர்களுடன் அவர் வாதாடியது, அவரது துணிச்சலை பறைசாற்றியது. அத்தோடு, சிறைச்சாலை வாயிலில் அமர்ந்து தர்ணா செய்த கருணாநிதியுடன் கூடவே அமர்ந்து எதிர்ப்பையும் பதிவு செய்தார் கனிமொழி. அதுகுறித்த புகைப்படங்கள் சோசியல் மீடியாக்கள் ஆதிக்கம்பெறாத அந்த காலத்திலேயே வைரலானது.

Kanimozhi
Kanimozhi

கனிமொழி தன்னோட வாழ்க்கையில் பெரிய பாராட்டா நினைக்கறது எதைத் தெரியுமா? வெயிட் பண்ணுங்க அதுக்கான பதிலை பின்னாடி சொல்றேன்.

சம்பவம் 3

இது சமீபத்தில் நடந்த சம்பவம். தி.மு.க துணைப் பொதுச்செயலாளராக கனிமொழி தேர்வு செய்யப்பட்ட பிறகு, அவரை பல்வேறு தரப்பினரும் நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தனர். பெண் நிர்வாகி ஒருவர், தனது குழந்தையுடன் கனிமொழியை சந்தித்தார். அப்போது, அந்தக் குழந்தை கனிமொழியின் காலில் விழுந்து வணங்க முற்பட்டது. அதைத் தடுத்த கனிமொழி, `என்னம்மா இது… என்ன பழக்கம்.. குழந்தை எல்லாம் காலில் விழுறாங்க. இது ரொம்ப தப்பு’ என்று குழந்தையின் தாயிடம் உரிமையோடு கடிந்துகொண்டார். பின்னர் அந்தக் குழந்தையிடம், ‘இப்படி எல்லாம் யார் காலிழும் விழக் கூடாது. இந்த பழக்கம் எல்லாம் இருக்கவே கூடாது’ என்று அக்கறையோடு கன்னத்தைப் பிடித்தபடி அறிவுரை கூறினார்.

சம்பவம் 4

இது கடந்த 2020 ஆகஸ்டில் நடந்த சம்பவம். டெல்லி செல்வதற்காக விமான நிலையம் சென்ற தன்னிடம் சி.ஐ.எஸ்.எஃப் வீரர் ஒருவர், இந்தியில் பேசியதாகவும் தனக்கு இந்தி தெரியவில்லை; தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பேசுங்கள் என்று சொன்னதும், நீங்கள் இந்தியர்தானே எனக் கேட்டார். எப்போதிருந்து இந்தியராக இருக்க இந்தி தெரிந்திருக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பி, இந்தி திணிப்பை நிறுத்துங்கள் என்று பதிவிட்டிருந்தார். அதற்கு, இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க நாங்கள் உத்தரவிட்டுள்ளோம். எந்த ஒரு குறிப்பிட்ட மொழியையும் திணிப்பது எங்கள் கொள்கையில் இல்லை’ என்று சி.ஐ.எஸ்.எஃப் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டது. அதேநேரம், 1989-ல் தேவிலால் தமிழகம் வந்தபோது அவர் இந்தியில் பேசியதை கனிமொழிதான் தமிழில் மொழிபெயர்த்தார். எனவே, அவருக்கு இந்தி தெரியாது என்று பொய்யுரைத்துள்ளது போல் சம்பவமே மலிவான மொழி சர்ச்சையே என்பது தெளிவு’ என்று பா.ஜ.கவின் ஹெச்.ராஜா விமர்சித்திருந்தார். ஆனால்,என்மீது குற்றம் சுமத்துபவர்கள், நான் இந்தியில் பேசியதை மொழிப்பெயர்த்தேனா என்பதை ஆதாரத்துடன் நிருப்பித்துக் காட்டட்டும். நாடாளுமன்றத்தில் நான் பல உறுப்பினர்களுடன் பழகி வருகின்றேன். அவர்கள் எல்லோருக்கும் எனக்கு இந்தி தெரியாது என்பது நன்றாகத் தெரியும். இதையெல்லாம் தாண்டி, இந்தி தெரிந்தால்தான் இந்தியராக இருக்க முடியும் என்பது எவ்வளவு பெரிய அவமானம்’ என்று பதிலடி கொடுத்திருந்தார் கனிமொழி. ஆனால், பா.ஜ.க தரப்பில் இருந்து அப்படியான எந்தவொரு ஆதாரமும் கொடுக்கப்படவில்லை.

சம்பவம் 5

மார்ச் 16, 2022

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் பற்றிய விவாதம் மக்களவையில் நடந்து கொண்டிருந்தது. விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய தூத்துக்குடி எம்.பி கனிமொழி, இந்தத் திட்டத்துக்கான செலவை ஏற்றுக்கொள்வது யார் என்று ஆங்கிலத்தில் கேள்வி எழுப்பிப் பேசினார். அதற்குப் பதிலளித்த அமைச்சர் பியூஷ் கோயல், இந்தியில் பேசத் தொடங்கினார். அப்போது குறுக்கிட்ட கனிமொழி, ஆங்கிலத்தில் எழுப்பிய கேள்விக்கு ஆங்கிலத்தில் பதிலளித்தால் நன்றாக இருக்கும் என்று சொல்வார். உடனே பியூஷ் கோயல், டிரான்ஸ்லேஷன் வசதி இருக்கிறதே என்பார். `தங்களுக்கு நன்றாக ஆங்கிலம் பேச வரும் என்று தெரியும். அதனால், எங்களுக்குப் புரியும்படி ஆங்கிலத்தில் பேசினால் சிறப்பாக இருக்கும்’ என்பார். இதையடுத்து, கனிமொழி பேசியதை ஏற்றுக்கொண்டு ஆங்கிலத்தில் பதிலளிக்கத் தொடங்குவார் அமைச்சர்.

Kanimozhi
Kanimozhi

தி.மு.க ஆட்சியில் இருந்தபோது கடந்த 2010-ல் கோவையில் செம்மொழி மாநாடு நடத்தப்பட்டது. அப்போது, மாநிலங்களவை எம்.பியாக இருந்த கனிமொழிக்கு ஆய்வரங்கு அமைப்புச் செயலாளர் உள்ளிட்ட பல பொறுப்புகள் வழங்கப்பட்டிருந்தன. அந்த ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்த கனிமொழிக்கு மாநாட்டின்போது கருணாநிதி பாராட்டுத் தெரிவித்தார். அந்த நெகிழ்வான தருணம் குறித்து ஒரு பேட்டியில் குறிப்பிட்ட கனிமொழி, `செம்மொழி மாநாட்டில் எனக்குப் பல்வேறு பொறுப்புகள் வழங்கப்பட்டிருந்தன. அப்போது மேடை ஏறும்போது பின்னால் இருந்த எனது கையைப் பற்றி முத்தம் கொடுத்து நன்றி கூறினார் தலைவர் கலைஞர் அவர்கள். அதனை எந்தக் காலத்திலும் என்னால் மறக்க முடியாது. அதனை ஒரு பெரிய அங்கீகாரமாகவே நான் நினைக்கிறேன்’ என்று நெகிழ்ந்திருந்தார்.

இந்தியில் வைக்கப்படும் அரசின் திட்டங்களின் பெயர்கள் பற்றி பேசியது, 2ஜி வழக்கில் 7 வருட போராட்டத்துக்குப் பின் வென்றது, தூத்துக்குடி தொகுதியில் தற்போதைய தெலங்கானா ஆளுநர் தமிழிசைக்கு எதிரான தேர்தலில் 3.50 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றது, கருணாநிதியின் இலக்கிய வாரிசு என பாராட்டப்பட்டதுனு இப்படி இன்னும் நிறைய சம்பவங்களை இந்த லிஸ்ட்ல சேர்க்கலாம். நேரம் கருதி ஐந்தே 5 சம்பவங்களை மட்டுமே குறிப்பிட்டிருக்கிறோம்.

இதேமாதிரி கனிமொழி வாழ்வில் நடந்த வேற முக்கியமான சம்பவங்கள் இருந்தா… அதை மறக்காமல் கமெண்ட்ல சொல்லுங்க!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top